குன்னூர் வெலிங்டன் மலை உச்சியில் 108 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி

By செய்திப்பிரிவு

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் அருகே ராணுவப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்ஆர்சிஹவாஹில் என்ற மலை உச்சியில் உள்ள ராணுவ வளாகத்தில் 108 அடி உயரமுள்ள கம்பத்தில் நேற்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், கொடி அறக்கட்டளை உதவியுடன் நடந்த இந்த விழாவில், ராணுவப் பயிற்சிக் கல்லூரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.

விழாவில், வெலிங்டன் ராணுவப் பயிற்சி மைய கமாண்டென்ட் சுனில் குமார் யாதவ், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேலு மற்றும் முன்னாள் கமாண்டென்ட், ராணுவ உயரதிகாரிகள், வீரர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறும்போது, ‘‘வெலிங்டன், அருவங்காடு, குன்னூர் பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதிலும் இருந்து கண்டுகளிக்கும் வகையில், மலை உச்சியில் தேசிய கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இது நமது தேசிய அடையாளம் மற்றும் தேசிய உணர்வை நினைவூட்டுகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE