சென்னைக்கு நீண்டகால துயர் துடைப்பு திட்டங்கள் வேண்டும்; நகர்ப்புற வளர்ச்சி திட்டமிடல் மிகவும் அவசியம் - மத்திய குழு தலைவர்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னைக்கு நீண்டகால துயர்துடைப்பு திட்டங்களை விரைவில் உருவாக்க வேண்டும் என்றும், நகர்ப்புற வளர்ச்சி திட்டமிடல் மிகவும் அவசியம் என்றும் மத்திய குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி தெரிவித்தார். மத்திய குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி அடங்கிய 3 பேர் குழு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளை நேற்று ஆய்வு செய்தது. அப்போது தாம்பரத்தில் குணால் சத்யார்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்படி, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். புயலுக்குப் பின் இங்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசு எதிர்கொண்ட பிரச்சினைகள் எங்களுக்கு தெரிகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் கண்டறிந்து வருகிறோம்.குறிப்பாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று ஆய்ந்து வருகிறோம்.

பாதிப்பைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட நாளில் வானிலை சூழல் மோசமானதால், 10 முதல் 12 அடி உயரத்துக்கு தண்ணீர் வந்துள்ளது. தரைதளத்தில் வசிப்பவர்கள் தங்கள் உடமைகளை அதிகளவில் இழந்துள்ளனர். எனவே, எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், தலைமைச்செயலர் ஆகியோர் நிவாரணம் தொடர்பான சிந்தனையில் உள்ளனர். அரசு அதிகாரிகள் களத்தில் வந்து பணியாற்றுவது நல்ல நிகழ்வாகும். என்டிஆர்எஃப், எஸ்டிஆர்எஃப், தன்னார்வலர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தற்போது மேற்கொண்டுள்ளது குறுகியகால வெள்ளத்தடுப்பு, நிவாரண நடவடிக்கைகள்தான். எனவே, சென்னை மாநகரத்துக்கு பெரிய அளவிலான துயர் தடுப்பு திட்டம் குறித்து யோசிக்க வேண்டும். அடுத்தமுறை இதேபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் மாநில அரசு நீண்டகால நிலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாநில அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து, பால், குடிநீர், உணவு கொடுத்ததுடன், மின் இணைப்பையும் விரைவாக வழங்கியுள்ளது. நிவாரண முகாம்களும், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டுள்ளன. நான் பார்த்த பகுதிகளில் மக்கள் நன்றாகவே இருக்கின்றனர். வீடுகளுக்குச் சென்று பார்த்தேன். ஆனால், இது குறுகியகால நிவாரணம் மட்டுமே. நாம் நீண்டகாலத்துக்கான துயர் துடைப்பு நடவடிக்கைகளை சென்னைக்கு உருவாக்க வேண்டும். ஏனென்றால் வானிலையை நாம் கட்டுப்படுத்த முடியாது. தற்போது, நாங்கள் சேதம் மற்றும் இழப்புகள் குறித்து கணக்கெடுத்துள்ளோம். உடனடி நிவாரண உதவி வழங்கப்பட வேண்டியதுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வரும், மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசியுள்ளார். விரைவில் கள நிலவரத்தை அறிந்து, விரைவாக அறிக்கை அளிப்போம்.

கால நிலை மாற்றத்தை பொறுத்தவரை, சென்னை தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக மழைப்பொழிவு மற்றும் புயல்களைச் சந்தித்து வருகிறது. சென்னை 2 முதல் 6 மீட்டர் வரை கடல் மட்டத்தில் இருந்து உயரமாக உள்ளது. இருப்பினும் அடிக்கடி புயல் தாக்குதல் இருப்பதால் சென்னை மாநகரம் இதற்காக எப்போதும் தயாராக இருக்க வேண்டியுள்ளது. சென்னை மாநகருக்கான நீண்டநாள் திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி திட்டமிடலில், அதிகப்படியான வெள்ளநீரைக் கையாள்வது குறித்து கருத்தில் கொள்ள வேண்டும். சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி அதிகளவில் நீர்த்தேக்கங்கள், நீர்வழித்தடங்கள் உள்ளன. தண்ணீர் பாதிப்பின்றி நாம் எவ்வாறு வாழ்வது என்பதை விரைவாகத் திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE