சிதம்பரம் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது; தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்துக்குள் நந்தவனம் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை பொது தீட்சிதர்கள் அரசின் எந்த வொரு அனுமதியும் பெறாமல் மேற்கொண்டு வருவதாகக்கூறி அறநிலையத்துறை சார்பிலும், எம்.என்.ராதா என்பவர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நேற்று நடைபெற்றது. அப்போது மனுதாரர் எம்.என்.ராதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜ், எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ள மாட்டோம் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துவிட்டு கட்டுமானப்பணிகளை தொடர்ந்து வருகின்றனர். நேற்று கூட ஜேசிபி இயந்திரம் கோயிலுக்குள் நிற்கிறது. அதற்கான புகைப்படங்கள் உள்ளது என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், திருவண்ணாமலை கோயிலுக்கு வெளியே கட்டுமானங்கள் கட்டப்படுவதாக பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் சிதம்பரத்தில் எந்த அனுமதியும் பெறாமல் கோயிலுக்குள்ளேயே கட்டுமானம் கட்டப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தீவிரமானது. பாரம்பரியமிக்க புராதன சின்னமான சிதம்பரம் கோயில் மீது கை வைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். சிதம்பரம் நடராஜர் கோயில் பக்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதன் மீது யாரும் உரிமை கோர முடியாது என்றனர். அப்போது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிசங்கர், சிதம்பரம் கோயில் வளாகத்துக்குள் எந்தவொரு விதிமீறலும் நடைபெறவில்லை. 150 ஆண்டுகள் கடந்த உயர் நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதுபோல்தான் இதுவும் என்றார்.

அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கிலும் சிதம்பரம் கோயிலில் முறையற்ற நிர்வாகம் நடைபெற்றால் அதில் அரசு தலையிடலாம் என்று தான் உள்ளது. கோயில் மீதான உரிமைகள் அனைத்தையும் தனிநபர்களுக்கு கொடுத்து விடவில்லை. சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த கோயிலை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அந்தக்குழு எப்போது வேண்டுமென்றாலும் சிதம்பரம் கோயிலுக்குள் சென்று ஆய்வு நடத்தும், என்றார்.

அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில், அந்த வழக்கைத் தொடர்ந்த நடராஜ தீட்சிதர் பக்தர்களை தாக்கியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டவர். அந்த வழக்கே உள்நோக்கமானது. தவறான தகவலை நீதிமன்றத்துக்கு தெரிவித்து அந்த உத்தரவைப் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், அதுதொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் தான் முறையிட வேண்டும். எங்களைப் பொருத்தமட்டில் சிதம்பரம் கோயிலுக்குள் கட்டுமானங்களை மேற்கொள்ள மாட்டோம் என உத்தரவாதம் அளித்துவி்ட்டு அதை மீற முடியாது. அதுதொடர்பான ஆதாரங்களை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வு செய்ய குழுவும் அமைக்கப்படும் என எச்சரித்தனர். மேலும், சிதம்பரம் கோயிலில் தற்போது உண்டியல் இல்லை. பக்தர்கள் அளிக்கும் நன்கொடை யாருக்கு செல்கிறது. நன்கொடையை வசூலிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது, என கேள்வி எழுப்பினர்.

அதற்கு இடையீட்டு மனுதாரரும், ஆலய வழிபாட்டுக்குழுத் தலைவருமான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ், 1951-ல் உயர்நீதிமன்றம் பிறப்பி்த்த உத்தரவுப்படி இந்த கோயிலில் உண்டியல் கிடையாது. பக்தர்கள் அளி்க்கும் நன்கொடை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தனிப்பட்ட முறையில் தரப்படும் காணிக்கையை தீட்சிதர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் சி.கனகராஜ், இந்த கோயிலுக்குள் அனுமதியின்றி யாகங்கள் நடத்தப்படுகிறது. அதற்கு பக்தர்களிடம் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை பணம் வசூலிக்கப்படுகிறது என்றார். அதற்கு நீதிபதிகள், பொத்தாம் பொதுவாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறக்கூடாது. அப்படி பணம் வசூலித்தால் அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் என கூறி வழக்கை டிச.20-க்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்