தமிழக ரேஷன் கடைகளுக்கு வந்தாச்சு கருவிழி ஸ்கேனர் - ‘இனி தாமதம் இல்லை!’

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ரேஷன் கடைகளில் கருவிழியை ஸ்கேன் செய்யக்கூடிய ஸ்கேனர், ரசீது பிரின்டர் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் விற்பனை முனையக் கருவி (பிஓஎஸ்) வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவி மூலம் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்து, நுகர்வோரின் விரல் ரேகை பதிவு செய்த பின்னர் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நேரங்களில் விரல் ரேகை பதிவை கருவி ஏற்றுக்கொள்ளாததால் பொருள் விநியோகத்தில் சிரமம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் வரிசையில் கால் கடுக்க நின்றுவிட்டு, பொருள் வாங்கும் நேரத்தில் விரல் ரேகை பதிவில் பிரச்சினை, ஸ்மார்ட் கார்டில் உள்ள க்யூஆர் கோடு ஸ்கேன் ஆகவில்லை எனக் கூறி பொருட்களை விநியோகிக்க மறுப்பதால் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இது, சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவும் மாறிவிடுகிறது.

இதைத் தடுப்பதற்காகவும், கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய பிஓஎஸ் கருவி பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மாவட்டத்தின் வழங்கல் துறை அலுவலர்கள் கூறியது: ரேஷன் கடைகளில் பிஓஎஸ் கருவி மூலம் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்யப்பட்டும், நுகர்வோரின் விரல் ரேகை பதிவு செய்த பின்னரும் அவர்களுக்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், முதியவர்கள் விரல் ரேகை பிஓஎஸ் கருவி ஏற்றுக்கொள்ள தாமதமாகிறது. சிலருக்கு பலமுறை முயற்சி செய்ய வேண்டியுள்ளது. மாற்று வழி இல்லாமல் இருந்ததால் பொருட்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கவும், மாற்று வழியாக கருவிழியை ஸ்கேன் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதாவது ஒரு வழியைப் பயன்படுத்தி தாமதமின்றி பொருட்களை வழங்க முடியும்.

மேலும், விநியோகிக்கப்படும் பொருட்கள் குறித்து ரசீது அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. விரைவாக ஸ்மார்ட் கார்டில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யும் வசதியும், மின்சாரம் சார்ஜாகும் வசதியும், நீண்ட நேரம் மின்சாரத்தை வைத்திருக்கும் வகையில் நவீன பேட்டரி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ள நிலையில், பைலட் கடைகள் என்ற அடிப்படையில் பரீட்சார்த்த முறையில் 70 ரேஷன் கடைகளுக்கு இந்த கூடுதல் வசதிகளுடன் கூடிய பிஓஎஸ் கருவி வழங்கப்பட்டுள்ளது. இக்கருவிகளை பயன்படுத்துவது குறித்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய புதிய கருவி பயன்படுத்துவதில் இருந்து நுகர்வோர் மற்றும் பணியாளர்கள் தெரிவிக்கும் கருத்துகள் பெறப்பட்டு, பிரச்சினைகள் சரி செய்யப்படும். அதன் பிறகு, அனைத்துக் கடைகளுக்கும் இந்த நவீனக் கருவி வழங்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE