ராயக்கோட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மக்கள் கோரிக்கை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகளும், உள்ளூர் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூரு - சேலம் செல்லும் ரயில் மார்க்கத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இவ்வழித்தடத்தில், பயணிகள் ரயில்களும், சரக்கு ஏற்றிச்செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. ராயக்கோட்டையில் உள்ள ரயில் நிலையம் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஓசூர், பெங்களூருக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.

ராயக்கோட்டை ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய் உடைந்து சிதலமடைந்து உள்ளது.

இதேபோல் சேலம், தருமபுரி நகரங்களுக்கும் செல்கின்றனர். இந்நிலையில், ராயக்கோட்டை ரயில் நிலையத்தில் போதிய குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், ரயிலுக்கு வரும் பயணிகள் மட்டுமின்றி அங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து ராயக்கோட்டையைச் சேர்ந்த தரணிராஜன் மற்றும் சிலர் கூறியதாவது; மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் ரயில் வசதி கிடையாது. இதனால் 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ராயக்கோட்டை ரயில் நிலையத்திற்கு பலர் வந்து, இங்கிருந்து செல்லும் நிலை உள்ளது.

குடிநீர் குழாய் அருகே கழிவு நீர் தேங்கி உள்ளது.

இதேபோல் ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்கள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் ரயில் மூலம் ஓசூர், பெங்களூரு நகரங்களுக்குச் சென்று வருகின்றனர். இதே போல் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு நாற்றுகள் அதிகளவில் ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், இங்கேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. அவ்வாறு காத்திருக்கும் பயணிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் ஒன்று செயல்பாட்டில் இல்லை. மற்றொரு குடிநீர் குழாய் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது.

ரயில் நிலையத்தில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்ற
நிலையில் காணப்படுகிறது.

இதேபோல், கழிவறை வசதி கிடையாது. பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் ரயில் நிலையம் உள்ளே, வெளியே அதிக அளவில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில்வே துறையினர், அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்வர வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் நாய்கள் கூட்டம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE