பணிச்சுமையால் இளம் மருத்துவர் இறந்ததாக கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: "ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயர்பட்ட படிப்பு மாணவர் பணிச்சுமையின் காரணமாக இறந்தார் என்று சில ஊடகங்கள் அபாண்டமாக குற்றம்சாட்டுகின்றன. இறந்த மருத்துவ மாணவர் பணியில் சேர்ந்து 6 நாட்கள்தான் ஆனது. மேலும் அவருக்கு ஒருநாள் கூட பணி ஒதுக்கப்படவில்லை" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி, ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலை, பீமனம்பேட்டை நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “புயல் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 9 மாதம் முதல் 15 வயது வரையிலான இளம் சிறார்களுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் டிச.13 முதல் டிச.30 வரை 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் இந்த தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசிகள் போடப்படுகிறது. பள்ளிகளை பொறுத்தவரை RBSK எனும் நடமாடும் மருத்துவ குழு வாகனங்களின் மூலம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெறுகிறது.

மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களை பொறுத்தவரை 9 மாதம் தொடங்கி 15 வயது வரையிலான இளம் சிறார்களின் எண்ணிக்கை 27.42 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தாலும், மழைக்கால நோய்களில் இருந்து காக்கும் பொருட்டு, கூடுதல் தவணை தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை பொறுத்தவரை விரையம் உட்பட 36 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து 10 லட்சம் தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளது. விரைவில் அவை தமிழகத்துக்கு வரும். தற்போது 2.90 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசின் மருத்துவத்துறை எடுத்துள்ளது.

டிசம்பர் மாதம் முழுவதும் 10 வாரங்கள் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இதுவரை 7 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்த 7 வாரங்களில் மட்டும் 16,516 முகாம்கள் நடத்தப்பட்டு, 7,83,443 பேர் பயனடைந்துள்ளனர். மேலும், டிச.16, டிச.23 மற்றும் டிச.30 ஆகிய 3 நாட்களும் இந்த மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது, பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு செய்தியினை ஒளிபரப்புவதற்கு முன்பு அதன் உண்மைத் தன்மையினை கண்டறிந்து வெளியிடவேண்டும் என்பது பத்திரிகை தர்மம் ஆகும். நேற்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயர் பட்ட படிப்பு (M.ch) மாணவர் ஒருவர் இறந்துள்ளார். அவர் பணிச்சுமையின் காரணமாக தான் இறந்தார் என்று சில ஊடகங்கள் அபாண்டமான குற்றச்சாட்டை கேள்வியாக கேட்டனர். அந்த இறந்த மருத்துவ மாணவர் பணியில் சேர்ந்து 6 நாட்கள் தான் ஆனது. மேலும் அவருக்கு ஒரு நாள் கூட பணி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவராகவே ஒரு அறுவை சிகிச்சையின் போது வந்து பார்வையாளராக மட்டுமே இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் அந்த முதுநிலை மருத்துவ மாணவர் எப்படி பணிச்சுமையின் காரணமாக இறந்திருக்கக்கூடும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

மேலும் சமூக வலைத்தளங்களில் வருகின்ற செய்திகளை எல்லாம் எடுத்து பத்திரிக்கைகளில் போடுவது எல்லாம் நியாயமான ஒன்றாக இருக்காது. தூய்மைப் பணியாளர் ஒருவர், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை துடைத்து சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்கிறார். ஆனால் அந்த தூய்மை பணியாளர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கிறார் என்று தவறான செய்தியை சமூக வளைதளங்களில் வெளியிடுகின்றனர். அதை பிரபல ஊடகங்களும் ஒளிபரப்பு செய்து தவறான தகவலை பரப்புகின்றனர். அரசு மருத்துவமனைகள் 100% மக்கள் வரிப்பணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனைகளாகும்.

இந்த மருத்துவ கட்டமைப்பு மற்றும் மருத்துவ சேவைகளை தரம் தாழ்த்தி செய்திகளை போட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தால் எந்த மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவார்கள். உங்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை, விமர்சனம் செய்யுங்கள் அந்த விமர்சனம் நியாயமான விமர்சனமாக இருக்க வேண்டும். விமர்சிப்பதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையை விசாரித்து செய்யுங்கள். உங்களிடம் வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை மருத்துவக் கல்லூரியுடன் (எம்எம்சி) இணைந்த ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் மருதுபாண்டியன் (30). கடந்த 10-ம்தேதி பணி முடிந்து வீட்டுக்கு சென்ற அவர், மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவர் மருதுபாண்டியன் உயிரிழப்புக்கு பணிச்சுமையே காரணம் என கூறப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE