'கிராசிங்'குக்கு காத்திருக்கும் சூழல்: விருதுநகர் - செங்கோட்டைக்கு தேவை இரட்டை ரயில் பாதை!

By என்.சன்னாசி

மதுரை: விருதுநகர் - செங்கோட்டை ரயில் வழித்தடத்தை இரட்டை அகல ரயில் பாதையாக மாற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க, தென்மாவட்ட எம்.பி.க்கள் வலியுறுத்தவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி - ராஜபாளையம் - விருதுநகர் ரயில் வழித்தடம் 1927-ம் ஆண்டில் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக தொடங்கப்பட்டது. செங்கோட்டை - விருதுநகர் 2004-ம் ஆண்டில் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. 130 கி.மீ. நீளம் கொண்ட செங்கோட்டை - விருதுநகர் ரயில் வழித்தடத்தில் பொதிகை, கொல்லம் மெயில், மதுரை - குருவாயூர், செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்கள் தினசரி ரயில்களாகவும், சிலம்பு ரயில் வாரம் மும்முறையும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இருமுறையும் தற்போது இயக்கப்படுகின்றன. மேலும், நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலும் இவ்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. குறிப்பாக காலை, மாலை வேளைகளில் கிராசிங் செய்வதற்கென தென்காசி, ராஜபாளையம் ரயில் நிலையங்களில் ரயில்கள் சில மணிக்கணக்கில் நிறுத்தப்படும் நிலை தொடர்கிறது.

இரட்டை வழித்தடம்: ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவதற்கும், அதிகப்படியான ரயில்களை ஓட்டுவதற்கும் இரட்டை அகல ரயில் பாதை மிக அவசியமாகிறது. தற்போது சென்னையில் இருந்து நெல்லை வரை முழுமையாக இரட்டை அகல ரயில் பாதை பணி முடிந்து ரயில்கள் தாமதமின்றி ஓடுகின்றன. அதுபோல இன்னும் சில மாதத்தில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் ரயில் வழித்தடம் மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை அகல ரயில் பாதை பணியும் முழுமை பெற்று பயன்பாட்டுக்கு வருகிறது.

எனவே, செங்கோட்டை - விருதுநகர் இடையே 130 கிமீ நீளத்திற்கு இரட்டை அகல ரயில் பாதை அமைக்க, சர்வே எடுக்கும் பணியை உடனே தொடங்கவேண்டும். நிலம் கையகப்படுத்துதல் பணி தொடங்கி இரட்டை ரயில் பாதை முடியும் வரை ஏறத்தாழ 5 ஆண்டுகள் தேவைப்படலாம். இது தொடர்பாக துரிதமாக பணியை மேற்கொள்ள நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தென் மாவட்ட எம்பிக்கள் குரல் கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடம் எழுந்துள்ளது.

இது குறித்து ரயில் பயணிகள் கூறியது: ''விருதுநகர் - தென்காசி இடையே பயணிகள் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதோடு விருதுநகர் - ராஜபாளையம் இடையே சரக்கு ரயில்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இதனால் தண்டவாளப் பயன்பாடு சதவீதமும் கூடுகிறது. தற்போதுள்ள ரயில் போக்குவரத்து, எதிர்கால ரயில் தேவையைக் கருத்தில்கொண்டு செங்கோட்டை - விருதுநகர் இரட்டை அகல ரயில் பாதை அமைக்க, நில சர்வே பணிக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும். அதிக போக்குவரத்து நெருக்கடி கொண்ட இந்த பாதை போர்க்கால அடிப்படையில் அமைக்க தென் மாவட்ட எம்.பிக்கள் கூட்டத்தொடரில் அழுத்தம் கொடுக்கவேண்டும்'' என்று கூறினர்.

விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ''அகல ரயில் பாதை பயன்பாட்டு வந்துவிட்டது. தொடர்ந்து விருதுநகர்- செங்கோட்டை இடையில் இரு வழித்தடம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் இது குறித்து கோரிக்கை எழுப்பப்படும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE