தஞ்சாவூர்: தஞ்சாவூர்- திருச்சி இடையே உள்ள ஐயனாபுரம் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த டிக்கெட் கவுன்ட்டர் மூடப்பட்டுள்ளது. இதனால், வருவாய் குறைவு எனக் காரணம் காட்டி, இந்த ரயில் நிலையத்தையும் மூட திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர்- திருச்சி இடையே உள்ள ஐயனாபுரத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரயில் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ரயில் நிலையத்தை ஐயனாபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள சஞ்சீவிபுரம், புங்கனூர், கோட்டரப்பட்டி, காம தேவமங்கலம், காங்கேயம்பட்டி, மாரநேரி உள்ளிட்ட 20 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதிக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் பயணிகள் ரயில்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் பணி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தஞ்சாவூரிலிருந்து ஐயனாபுரத்துக்கு டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு திருவெறும்பூர் வரையும் (ஒரே கட்டணம் என்பதால்), திருச்சியிலிருந்து ஐயனாபுரத்துக்கு டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு பூதலூர் வரையும் டிக்கெட் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஐயனாபுரம் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டரும் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் நிலையத்தை மூட தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதா என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஐயனாபுரம் சி.முருகேசன் கூறியது: ஐயனாபுரம் வழியாக ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இங்கிருந்து பேருந்தில் தஞ்சாவூர் செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகிறது. ஆனால், ரயிலில் 20 நிமிடங்களில் செல்ல முடியும். இதனால், பேருந்தில் செல்வதை விட ரயிலில் செல்வதையே இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். இங்கு நேரடியாக டிக்கெட் வழங்கி வந்த ரயில்வே நிர்வாகம், இந்த சேவையை 2015 முதல் தனியார் முகவருக்கு கமிஷன் அடிப்படையில் வழங்கியது. ஆனால், அங்கு பணிபுரியும் ஊழியர் அவ்வப்போது டிக்கெட் கவுன்ட்டரை மூடிவிட்டு சென்றுவிடுகிறார். இப்போது, கடந்த சனிக்கிழமை (நேற்று முன்தினம்) முதல் இந்த டிக்கெட் கவுன்ட்டர் மூடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தஞ்சாவூரிலிருந்து ஐயனாபுரத்துக்கு டிக்கெட் எடுப்பவர்களுக்கு திருவெறும்பூர் வரையிலும், திருச்சியிலிருந்து செல்பவர்களுக்கு பூதலூர் வரையிலும் டிக்கெட் கொடுத்து வருகின்றனர். இதனால் ஐயனாபுரத்தில் பயணிகள் ஏறி, இறங்குவது என்பது ரயில்வே கணக்கில் பதிவாகாமல் போய் விடுகிறது. இதனிடையே, தற்போது தனியார் டிக்கெட் கவுன்ட்டரும் மூடப்பட்டுள்ளதால், வருவாய் குறைவைக் காரணம் காட்டி, இந்த ரயில் நிலையத்தை மூட திட்டமிட்டுள்ளார்களோ என்ற ஐயம் எழுகிறது. எனவே, தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வரும் ஐயனாபுரம் ரயில் நிலையத்தை, வருவாய் இல்லை எனக் கூறி மூடும் முயற்சியை தெற்கு ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்.
மேலும், இங்கு நின்று சென்ற மயிலாடுதுறை- திருநெல்வேலி பாஸ்ட் பாசஞ்சர் ரயில் 2022 அக்டோபர் 10-ம் தேதி முதல் நிற்பதில்லை. அதை மீண்டும் இங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘போதிய வருவாய் இல்லாத ரயில் நிலையங்களின் பட்டியலில் ஐயனாபுரம் ரயில்வே நிலையமும் இடம் பெற்றுள்ளது. ரயில் நிலையத்தை மூடுவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் தான் முடிவு செய்ய முடியும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago