காமராசர் பல்கலை.யில் சம்பள இழுபறி: துணைவேந்தரை சிறைபிடித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By என்.சன்னாசி

மதுரை: காமராசர் பல்கலைக்கழகத்தில் தொடரும் நிதிநெருக்கடியால் சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதில் இழுபறி நீடிப்பதால் அலுவலர்கள், ஊழியர்கள் இன்று துணைவேந்தர் அலுவலகத்துக்குள் புகுந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் கடந்த சில மாதமாகவே பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் முறையாக சரியான தேதியில் சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதில்லை என்ற புகார்கள் ஏற்கெனவே உள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர், செயலர், ஆளுநருக்கு பேராசிரியர், அலுவலர்கள் சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் தொடர்ந்து புகார் கடிதங்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இச்சூழல் தொடர்கிறது. அக்டோபர் மாதத்திற்கான சம்பளம், ஓய்வூதியம் 18-ம் தேதிக்கு மேல் வழங்கிய நிலையில், நவம்பருக்கான சம்பளம் இன்று வரை வழங்கவில்லை.

இந்நிலையில், தாமதமின்றி சம்பளம், ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி அலுவலர்கள் சங்கத்தினர், ஓய்வூதியர்கள் துணைவேந்தர் அலுவலகம் முன்பு ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பல்கலை. பேராசிரியர்கள் , ஓய்வூதியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் முத்தையா, சுந்தர மூர்த்தி, எஸ்சிஎஸ்டி பிரிவு ஊழியர் சங்க தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்டார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென துணைவேந்தர் அலுவலகத்திற்கு இன்று புகுந்தனர்.

அவர்கள் கடந்த மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், மாதந்தோறும் தாமதமின்றி சம்பளம், ஓய்வூதியம் வழங்க துணைவேந்தர், பல்கலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி துணைவேந்தரை சிறைபிடித்தனர். அப்போது கோஷமிட்டு ஆர்ப்பாட்டமும் செய்தனர். அங்கு இருத்தரப்பிலும் வாக்குவாதமும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் துணைவேந்தரை சிறைபிடிக்கும் சூழலும் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீஸாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இப்போராட்டம் மாலை வரை நீடித்தது. இது குறித்து பல்கலை நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, ''நிதி நெருக்கடியால் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE