சென்னை: "கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகளையும், தன்னாட்சி அதிகாரத்தையும் முற்றாகப் பறித்தது நாட்டை ஆண்டு வரும் பாஜக அரசு. தற்போது அச்செயல்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிக ஏற்பாடு எனக் கூறியுள்ள சந்திரசூட் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வின் வாதம் அபத்தமானது. இந்தத் தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றில் பெரும் கரும்புள்ளி" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஷ்மீரின் சிறப்பு அதிகாரமான 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை ரத்துசெய்து, தன்னாட்சியுரிமையை முழுமையாகப் பறித்த மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. காஷ்மீர் மக்களின் உணர்வுக்கும், விருப்பத்துக்கும் மாறாக, தான்தோன்றித்தனமாக அம்மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து, ஜம்மு, காஷ்மீர், லே-லடாக் என மூன்று பிரதேசங்களாக துண்டாக்கி அறிவித்த பாஜக அரசின் நடவடிக்கையானது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம்; அரசப்பயங்கரவாதத்தின் செயல்வடிவம். அதனை வழிமொழிந்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுப்பேரவலமாகும்.
காஷ்மீர் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மாநிலச் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து, அம்மாநிலத்தைப் பிளந்த மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்தையும் பிளந்துப் பிரித்து, அவற்றை ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றக்கூடிய வானளாவிய அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாகக் கூறுகிறது இத்தீர்ப்பு. இனி எந்த மாநிலம் மத்திய அரசால் துண்டாடப்பட்டு, அவை ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றப்பட்டாலும் சட்டப்பூர்வமாக அதனை ஒன்றும்செய்ய முடியாதெனும் பேராபத்துக்கு இத்தீர்ப்பின் மூலம் அடிகோலியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இது மாநிலங்களின் தன்னாட்சியுரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் வைக்கப்பட்ட வேட்டாகும். மேலும் இந்திய பெருநிலத்தில் அரச வன்முறையாலும், அதிகார முறைகேட்டினாலும் அதிகப்படியாகப் பாதிக்கப்பட்ட காஷ்மீரிய மக்கள், தனது இறுதி நம்பிக்கையாகக் கொண்டிருந்த ஜனநாயகத்தின் கடைசிப் படிநிலையான உச்ச நீதிமன்றமும் அவர்களைக் கைவிட்டது மிகத் தவறான முன்னுதாரணமாகும். எவ்வித ஜனநாயக மரபுகளையும், மாண்புகளையும் பின்பற்றாது, அடக்குமுறையை ஏவி, ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு நிகழ்ந்த காஷ்மீரின் சிறப்பு அதிகாரப்பறிப்பை உறுதிசெய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் பெரும் கரும்புள்ளி; காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதி.
» “செப்பு கலந்த தங்கம் அல்ல... மாசற்ற மாணிக்கம்!” - ரஜினிக்கு ஹர்பஜன் பிறந்தநாள் வாழ்த்து
» COP28 உச்சி மாநாட்டு அரங்கை அதிரவைத்த 12 வயது இந்திய சிறுமி - வைரல் வீடியோ
காஷ்மீரி எனும் தேசிய இனத்தின் வரலாற்றுத் தாயகம் காஷ்மீர். அது இந்தியா என்கிற நாடு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே அத்தேசிய இன மக்களுக்குச் சொந்தமாக விளங்கிய தனித்துவமிக்க நிலப்பரப்பாகும். இந்திய நாடு விடுதலையை எட்டிய நாளான 1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவோடு இல்லாது மன்னராட்சியின் கீழ் தன்னாட்சியோடு தனித்தே இயங்கிக்கொண்டிருந்தது காஷ்மீர். பூகோள அரசியல் நெருக்கடிக்கிடையே, பொது வாக்கெடுப்பு எனும் அடிப்படையில்தான் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தது என்பது மறுக்கவியலா வரலாற்றுப்பேருண்மை. இதனால்தான், இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் சட்டப்பிரிவு 370ன் கீழ் சிறப்புச் சட்டங்கள் காஷ்மீருக்கென்று இயற்றப்பட்டன. இதன்படி, ராணுவம், வெளியுறவு, தகவல்தொடர்பு ஆகியவற்றைத் தவிர, இன்னபிற துறைகள் தொடர்பான முடிவுகள் காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதல் பெற்றால்தான் அம்மாநிலத்துக்குப் பொருந்தும் எனும் நிலையிருந்தது.
காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்கத் தடை போன்ற சிறப்புச் சட்டங்கள் அமலில் இருந்தன. 1954-ம் ஆண்டு மாநில அரசின் ஒப்புதலுடன், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370 இணைப்பு (1)ல் 35ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இப்பிரிவு, வெளி மாநிலத்தவர்கள் காஷ்மீரில் அரசு வேலை, அரசின் சலுகைகள், மானியங்களைப் பெற முடியாது என்றும், காஷ்மீரின் நிரந்தரக் குடிமக்கள் யார் என்பதையும், அவர்களது உரிமையையும் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்றும் சில சிறப்புச் சலுகைகளை அம்மாநிலத்துக்கென்று வரையறுத்தது. இவ்வாறு, பல்வேறு சிறப்புரிமைகள் வழங்கப்பட்டு, பொது வாக்கெடுப்பு எனும் நிபந்தனையின் அடிப்படையில் இந்தியாவோடு இணைக்கப்பட்ட காஷ்மீரில் இன்றளவும் அந்த வாக்கெடுப்பு நடத்தப்படாதது என்பது காஷ்மீரிகளுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையான வஞ்சகமாகும்.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அந்தச் சிறப்புரிமைகளையும், தன்னாட்சி அதிகாரத்தையும் முற்றாகப் பறித்தது நாட்டையாண்டு வரும் பாஜக அரசு. தற்போது அச்செயல்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிக ஏற்பாடு எனக் கூறியுள்ள சந்திரசூட் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வின் வாதம் அபத்தமானது. இந்தியாவோடு இணைக்கப்பட்டதுதான் தற்காலிக ஏற்பாடே ஒழிய, சிறப்புரிமை வழங்கும் 370 சட்டப்பிரிவு அல்ல. பொது வாக்கெடுப்பு எனும் முதன்மை நிபந்தனையின் அடிப்படையில் காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டதை மறைத்துவிட்டு, அந்நிலத்துக்கு வழங்கப்பட்ட தன்னுரிமைகளையும், சிறப்பு அதிகாரத்தையும் மத்திய அரசு இன்றைக்கு முழுவதுமாகப் பறித்திருப்பதும், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதும் காஷ்மீரிகளுக்குச் செய்யப்பட்ட வரலாற்றுப் பெருந்துரோகமாகும்.
ஆகவே, ‘காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே’ எனும் மண்ணுரிமை முழக்கத்தை வழிமொழிந்து, வஞ்சகத்துக்கும், பாதிப்புக்கும் உள்ளாகியிருக்கும் காஷ்மீரிகளுக்கு சக தேசிய இன மக்களாய் எனது தார்மிக ஆதரவினை வழங்கி, இத்தீர்ப்புக்கு எதிரான எனது எதிர்ப்புணர்வைப் பதிவுசெய்கிறேன்” என்று சீமான் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago