மிக்ஜாம் புயல் பாதிப்பு | தூய்மைப் பணியாளர்களுக்கு தலா ரூ.4,000 வீதம் ரூ.1.37 கோடி ஊக்கத்தொகை 

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.12) பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையினைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கியிருந்த குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றி சுத்தம் செய்திடும் வகையில், திருநெல்வேலி மண்டலத்தில் 173 நபர்கள், மதுரை மண்டலத்தில் 287 நபர்கள், தஞ்சாவூர் மண்டலத்தில் 185 நபர்கள், வேலூர் மண்டலத்தில் 396 நபர்கள், வேலூர் மாநகராட்சியில் 107 நபர்கள், சேலம் மண்டலத்தில் 91 நபர்கள், சேலம் மாநகராட்சியில் 220 நபர்கள், திருப்பூர் மண்டலத்தில் 225 நபர்கள், திருப்பூர் மாநகராட்சியில் 133 நபர்கள், செங்கல்பட்டு மண்டலத்தில் 4 நபர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சியில் 414 நபர்கள், ஈரோடு மாநகராட்சியில் 113 நபர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 260 நபர்கள் என மொத்தம் 2,608 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் 22,075 தூய்மைப் பணியாளர்களும், தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

மிக்ஜாம் மற்றும் கனமழையின் காரணமாக 46,727.66 மெட்ரிக் டன் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 30.11.2023 முதல் 10.12.2023 வரை 162 நிவாரண முகாம்களில் 1,35,681 நபர்கள் தங்கவைக்கப்பட்டனர். நிவாரண மையங்களில் தங்கிய பொதுமக்கள் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மூன்று வேளைகளுக்கு 49,59,351 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.கனமழையால் ஏற்பட்ட குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றிட தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு பகுதிகளில் 841 தூய்மைப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டன.

கடினமான இச்சூழ்நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றிடும் பணிகளை மேற்கொண்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை தமிழக முதல்வர் பாராட்டி ஊக்கத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், ஜோசப் சாமுவேல், ஆர்.மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்