ஆவின் பால் பாக்கெட்களை கால்வாயில் கொட்டியவர்மீது கடும் நடவடிக்கை அவசியம்: பால் முகவர் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தாம்பரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்களை கொட்டி வீணாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், தாம்பரம் கழிவுநீர் கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்கள் வீணாக கொட்டப்படுவதாக தகவல் வெளியானது.

பால் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதியுற்ற நிலையில், பால் கீழே கொட்டப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இத்தகவல் வேகமாக பரவியதை அடுத்து, ஆவின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. விற்பனை செய்ய இயலாக ஆவின் பால் பாக்கெட்கள் மற்றும் தனியார் பால் பாக்கெட்களை சில சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் வியாபாரிகள் அங்கே கொட்டிவிட்டு சென்றதாக தெரிகிறது. ஆவின் பால் பாக்கெட்கள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று ஆவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கழிவுநீர் கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்களை கொட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தாம்பரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயிலும், குப்பையிலும் ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்கள் கொட்டப்பட்டிருந்தன.

இதை கொட்டியவர்கள், இயற்கை பேரிடரை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய நினைத்து, அது முடியாமல் போன நபர்களாக இருப்பார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, அந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்களை வீணாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE