எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் | அதிமுக ஆர்ப்பாட்டம், மீனவர்கள் மறியல்: கடலை பாதுகாக்க நிரந்தர தீர்வு காண கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: எண்ணூர் எண்ணெய் கசிவால் கடல்வளம் பாதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு நிரந்தர தீர்வு காணக்கோரி அதிமுக மற்றும் மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை மணலி பகுதியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பரவிய எண்ணெய் படலம், கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம், திருவொற்றியூர் நெட்டுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவ பகுதிகளில் பரவி, கடலுக்கு சென்று சுமார் 20 கிமீ தூரத்துக்கு பரவியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதக்கின்றன. அப்பகுதிகளுக்கு இரைதேடி வரும் பறவைகள், இப்போதுவருவதில்லை.

மீன்படி படகுகள், வலைகள்மீது தடிமனான பிசின் போன்ற கரிய நிறக்கழிவு படிந்து பாழாகியுள்ளன. அங்குள்ள குடியிருப்பு சுவர்கள், தெருக்கள், நிலங்களில் உள்ள தாவரங்கள் மீதும் எண்ணெய் படலம் படிந்துள்ளது. அங்கு பெட்ரோலிய நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. அங்கு தற்போது மீன்பிடிக்க முடியவில்லை. பிடித்தாலும், யாரும் வாங்குவதில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்ததை கண்டித்தும், நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தியும் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் தலைமையில் மீனவர்கள் பைபர் படகில் எண்ணெய் கழிவுகள் மிதக்கும் எண்ணூர் முகத்துவாரப் பகுதிக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எண்ணூர் நெடுக்குக்குப்பம் பகுதியில் ஒரு வாரமாக எண்ணெய் கழிவுகளை அகற்றாததை கண்டித்து, அப்பகுதி மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை ஆணையர் (கல்வி) சரண்யா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தனர். அங்கு நடைபெற்று வந்த சிறப்பு மருத்துவ முகாமையும் பார்வையிட்டனர். இ

தனிடையே இந்தியக் கடலோர காவல்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புயலுக்குப் பின் வெள்ளத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரை 20 கி.மீட்டர் வரை எண்ணெய் கசிவு படர்ந்துள்ளது. அவை மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியக் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் ரசாயன பவுடர் எண்ணெய் கரைப்பான் தெளிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

ஆய்வுக் குழுவை அமைத்தது தமிழக அரசு: எண்ணெய் கசிவுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன் தலைமையில் நீரி (NEERI) முதன்மை விஞ்ஞானி ஜி.சரவணன், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சென்னை மண்டல இயக்குநர் எச்.டி.வரலட்சுமி, கடலோர காவல்படை கமாண்டெண்ட் வி.குமார், அண்ணா பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறை பேராசிரியர் வி.டி.பேரரசு உள்ளிட்டோர் அடங்கிய தொழில்நுட்ப குழுவை அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இக்குழு நேற்று காலை சிபிசிஎல் வளாகம் மற்றும் தொடர்புடைய தொழிற்சாலையில் ஆய்வு செய்து, நேற்று மாலையே முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை மாநில எண்ணெய் கசிவு மேலாண்மை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. விரிவான அறிக்கையை இரு நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE