ஆசிரியர் போக்சோவில் கைதுக்கு எதிர்ப்பு: வாக்கூரில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பக் கோரி எம்எல்ஏ பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: வாக்கூரில் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டு, அவர்களை பள்ளிக்கு அனுப்பக்கோரி பெற் றோருடன் நேற்று எம்எல்ஏ பேச்சுவார்த்தை நடத்தினார்.

விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் கருணாகரன் (32) என்பவர் நவ.28- ம் தேதி இரவு விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், "ஆசிரியர் கருணாகரன் நல்ல மனிதர்.பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடையே உள்ள ஈகோ பிரச்சினையில் பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அவரை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களை பணி இடமாற்றம் செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்து நவ. 29- ம்தேதி முதல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பள்ளிக்கு 7 மாணவர்கள் மட்டுமே வருகை தந்தனர். இந் நிலையில் பள்ளிக்கு குழந்தைகளை மீண்டும் அனுப்ப வேண்டும் என தொகுதி எம்எல்ஏ புகழேந்தி தலைமையில் பள்ளியில் பெற்றோர் மற்றும் முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பள்ளி ஆசிரியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து அவரை சிறையிலிருந்து வெளியே வர நடவடிக்கை எடுக்கப்படும். யார் இந்த செயலில் ஈடுபட்டது என தீவிர விசாரணை நடத்தப்படும். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பெற்றோர் அனைவரும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என புகழேந்தி எம்எல்ஏ கேட்டுக் கொண்டார். அவரிடம் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், ஊராட்சிமன்ற தலைவர் ராமச்சந்திரன் உட்பட கிராம முக்கியஸ்தர்கள், மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE