மாற்றுத் திறனாளி நலத் துறைக்கு நிரந்தர அதிகாரியை நியமிக்கக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: மாற்றுத் திறனாளி நலத்துறைக்கு நிரந்தர அதிகாரி நியமிக்கக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் மதுரை மாவட்டத்துக்கு மாற்றுத் திறனாளி நலத் துறை அதிகாரியை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநகர மாவட்டத் தலைவர் பி.வீரமணி தலைமை வகித்தார். புறநகர் மாவட்டத் தலைவர் கே.தவமணி முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளரும், மாநகராட்சி உறுப்பினருமான தி.குமரவேல் துவக்கி வைத்தார். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் மனு கொடுக்க வந்தால் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையை உணர்ந்து ஆட்சியர் செயல்பட வேண்டும். மதுரையில் நடந்த உலக மாற்றுத்திறனாளி தின அரசு விழாவில் ஆட்சியர் புறக்கணித்தது ஏன்? இனிவரும் இதுபோன்று நிகழாமல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.பாலமுருகன் (மாநகர்), வி.முருகன் (புறநகர்) ஆகியோர் பேசினர்.

இதில், மாவட்ட துணைத் தலைவர், ஏ.பாண்டி, உதவித் தலைவர் பா.பழனியம்மாள், துணைச் செயலாளர் எம்.சொர்ணவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.செல்வராஜ் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட நிர்வாகி எஸ்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE