அதிமுக பெயர், சின்னம் விவகாரம் | “தனி நீதிபதி உத்தரவை மீறவில்லை” - உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தகவல்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை தற்போது வரை மீறவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பன்னீர்செல்வத்துக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதம்குமார், ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் சலீம், மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும். மேலும், தற்போது வரை இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மீறவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE