புறக்கணிப்பில் காரைக்கால், நாகூர் பகுதிகள்: தெற்கு ரயில்வே மீது பயணிகள் குற்றச்சாட்டு

By வீ.தமிழன்பன்

காரைக்கால்: காரைக்கால், நாகூர் பகுதிகளை தெற்கு ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருவதாக ரயில் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கரோனா பரவல் சூழலுக்கு முன்பு காரைக்கால், நாகூர் பகுதிகளிலிருந்து இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும், அதன் பின்னர் மீண்டும் இயக்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் எல்லாம் பெருமளவில் படிப்படியாக மீண்டும் இயக்கப்படுவதுடன், புதிய ரயில்களும் விடப்பட்டுள்ளன. ஆனால், காரைக்கால், நாகூர் பகுதிகளை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மேலும், காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இப்பகுதிகளிலிருந்து மதுரைக்கு ரயில் வசதியே இல்லை.

இது குறித்து நாகூர்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.மோகன், செயலர் நாகூர் சித்திக் ஆகியோர் `இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: கரோனாவுக்கு முன்பு காரைக்கால் - திருச்சி இடையே, காலை 6.30 மணிக்கு காரைக்காலிலிருந்தும், மாலை 4.30 மணிக்கு திருச்சியிலிருந்தும் இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. காரைக்கால், நாகூரில் இருந்து தஞ்சாவூருக்குச் செல்வதற்கு கூட மதியம் 1 மணி வரை ரயில் வசதி இல்லை. திருச்சியில் இருந்து காலை 8.35-க்கு பிறகு நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு வர ரயில் வசதி இல்லை. இதனால், காரைக்கால், திருநள்ளாறு, நாகூர் பகுதிகளுக்கு வரக்கூடிய ஆன்மிக சுற்றுலா பயணிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். காலை 6.45 மணிக்கு தஞ்சாவூரில் புறப்பட்டு காரைக்கால் வரக்கூடிய ரயில், அதன் பின்னர் காரைக்கால்- வேளாங்கண்ணி, வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் இடையே இயக்கப்படுகிறது.

இதனால் பயணிகளுக்கு பெருமளவில் பயன் இல்லை. ஆகையால் இந்த ரயிலை காரைக்கால்-திருச்சி இடையே விரைவு ரயிலாக இயக்க வேண்டும். சென்னையில் இருந்து புறப்பட்டு அதிகாலையில் காரைக்கால் வரும் ரயில், மீண்டும் மாலை எர்ணாகுளம் விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில் அந்த ரயிலை காரைக்கால்-திருச்சி இடையே இயக்க வேண்டும். ஈரோடு - திருச்சி- ஈரோடு ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும் என திருச்சி கோட்ட அதிகாரிகள் உத்தரவாதம் அளித்து 6 மாதங்களுக்கு மேலாகியும், ரயில்வே வாரியம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, இந்த கோரிக்கை ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. காலை 7 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து திருச்சிக்கும், அதே ரயில் மாலை 4.45-க்கு திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கும் இயக்கப்படுகிறது. வேறு எந்த தினசரி ரயிலும் வேளாங்கண்ணிக்கு கிடையாது.

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்துக்கு காரைக்காலிலிருந்து நாகூர், நாகை வழியாக இயக்கப்படும் சரக்கு ரயில்கள் மூலம்தான் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால் இப்பகுதிகளில் உள்ள பயணிகளின் நலனை ரயில்வே நிர்வாகம் கருத்தில் கொள்வதில்லை. தொடர்ந்து பயணிகள் சங்கத்தினர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தாலும் கூட, கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய இடத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும், ரயில்வே நிர்வாகத்தினரும் உரிய முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்ற வேண்டும். டிச.20-ம் தேதி திருநள்ளாறில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, டிச.14-ம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. நாகூர் கந்தூரி விழா, டிச.25-ம் தேதி வேளாங்கண்ணியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டு கொண்டாட்டம், பொங்கல் பண்டிகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு காரைக்கால்-திருச்சி, தாம்பரம்-காரைக்கால், நாகர்கோவில்-காரைக்கால் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றனர்.

இதுகுறித்து புதுச்சேரி மக்களவை உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான வி.வைத்திலிங்கம் கூறியது: திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கமிட்டியில், காரைக்கால்- திருச்சி இடையே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட ரயிலை உடனடியாக மீண்டும் இயக்க வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காரைக்காலிலிருந்து கூடுதலாக ரயில்கள் இயக்குவது தொடர்பாக ரயிவே கமிட்டியிலும் பேசப்பட்டுள்ளது. மத்திய அமைச்சருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் ரயில்வே நிலைக்குழு புதுச்சேரிக்கு வரவுள்ளது. இதில் புதுச்சேரி, காரைக்காலுக்கான ரயில் தேவைகள், பிரச்சினைகள் குறித்து பேசப்படவுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE