சூறாவளியால் சாய்ந்த செங்கரும்பு, இலைக் கருகலால் காய்ந்த மஞ்சள்: சிவகங்கை விவசாயிகள் கண்ணீர்

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கை அருகே சாய்ந்த செங்கரும்பு, காய்ந்த மஞ்சளால் பலத்த நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை அருகே மேலச்சாலூர், கீழச்சாலூர், இடையமேலூர், சிவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கரில் செங்கரும்பு, மஞ்சள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு விவசாயியும் கிணற்றுப் பாசனம் மூலம் 10 முதல் 50 சென்ட் வரை செங்கரும்பும், 5 முதல் 10 சென்ட் வரை மஞ்சளும் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் கரும்புகள், மஞ்சள் கொத்து பொங்கல் பண்டிகைக்கு சிவகங்கை, மதுரை, மேலூர், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும்.

இந்நிலையில் சமீபத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் கரும்புகள் சாய்ந்தன. இதையடுத்து அந்தக் கரும்புகளை விவசாயிகள் மீண்டும் நிமர்த்தி வைத்தனர். ஆனாலும் பெரும்பாலான கரும்புகள் வளர்ச்சி அடையாமல் சுருங்கிக் காணப்படுகின்றன. சிலர் சாய்ந்த கரும்புகளை கயிற்றால் கட்டி நிற்க வைத்துள்ளனர். ஆனாலும் அவை வெளிறிய நிறத்தில் காணப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இனி கரும்புகளை வளர்ச்சி அடைய வைப்பதில் சிரமம் உள்ளது.

இலைக்கருகலால் பாதிக்கப்பட்ட மஞ்சள்

அதேபோல் மேக மூட்டமும், வெயிலும் மாறி, மாறி வருவதால் மஞ்சளும் இலைக் கருகலால் பாதிக்கப்பட்டது. இதனால் செங்கரும்பு, மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மேலச்சாலூர் விவசாயி அழகர்சாமி கூறியதாவது: 30 சென்டில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளேன். கரணை நடவு, உரம், தோகை வெட்டுதல் போன்றவைக்கு இதுவரை ரூ.60,000 செலவழித்தேன். இனியும் வெட்டுக் கூலி, வாகன வாடகை, ஏற்றுதல் போன்றவைக்கு செலவழிக்க வேண்டியுள்ளது. மொத்தம் 3,600 கரும்புகள் கிடைக்க வேண்டும்.

ஆனால் மழையில் சாய்ந்த 2,000-க்கும் மேற்பட்ட கரும்புகள் வெளிறி இருப்பதால் விலை போகாது. இதனால் எங்களுக்குப் பெருத்த நஷ்டம்தான். அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலச்சாலூர் விவசாயி நாச்சி கூறுகையில் ‘‘ 10 சென்டில் மஞ்சள் சாகுபடி செய்தோம். உழவு, நடவு, உரம் என ரூ.10,000 வரை செலவழித்தோம். ரூ.20,000 வரை விற்கலாம் என நினைத்திருந்தோம். ஆனால் இலைக் கருகலால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலத்த நஷ்டம் ஏற்பட்டது’’ என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE