சென்னை: பெரம்பூர் அருந்ததியர் நகரில் அகற்றப்படாத குப்பை, தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதியடைந்துள்ளனர். பெரம்பூர் அருந்ததியர் நகரில் 12 தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு சாதாரண மழைக்கே நீர் தேங்கும். அதிலும் அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை அருந்ததியர் நகரையே நாசம் செய்துள்ளது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இப்பகுதியும் தப்பவில்லை. மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு முறையாக உணவு, குழந்தைகளுக்கு பால் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் வழங்கிய நிவாரணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மழைநின்ற பிறகு தாமதமாகவே மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டது. தற்போதும் மழைக்கு பிறகான பாதிப்பு அவ்விடங்களில் கடுமையாக இருப்பதாகவும், இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.பி.பரந்தாமன் கூறியதாவது: கனமழை பெய்தபோது அருந்ததியர் நகரின் பெரும்பாலான இடங்களில் ஆள் மூழ்கும் அளவுக்கு நீர் இருந்தது. இது தொடர்பாக புகார் தெரிவிக்க மாநகராட்சியின் உதவி எண்ணை அழைத்த போது, யாருமே அழைப்பை எடுக்கவில்லை. ஆனால் மக்கள் பிரதிநிதிகளோ நீர் வடிந்த பிறகு இரு நாட்களுக்கு முன்னரே எங்களை வந்து சந்தித்தனர். அப்போதும் முக்கிய பிரதிநிதிகளை எங்கள் பகுதிக்கு அழைத்து வராமல் வேறு இடங்களை பார்வையிட வைத்து அனுப்பிவிட்டனர். எங்கள் பகுதி தொடக்கத்தில் இருந்தே முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே எடுத்து வரப்பட்ட நிவாரணப் பொருட்களை மக்கள் ஏற்க மறுத்தனர். குறிப்பாக பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள 7 குப்பைத் தொட்டிகள் எங்கள் பகுதியில் கோவிந்தன் தெருவில் வைக்கப்பட்டுள்ளன. அதே நேரம் 12 தெருக்களிலும் குப்பைகள் கடந்த ஒரு வாரகாலமாக அகற்றப்படவில்லை. மாநகராட்சி கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அவ்வப்போது, பாதாள சாக்கடையில் இருந்தும் நீர் வெளியேறி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவருக்கும் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மழை பாதிப்பில் இருந்து நாங்கள் மீண்டு வர பல மாதங்களாகும். எங்களுக்கு நிவாரணம், இழப்பீடு போன்றவற்றை விட நிரந்தரமாக தூய்மையான சுற்றுப்புறச் சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இது தொடர்பாக மாநகராட்சி மண்டல அதிகாரி ஏ.எஸ்.முருகன் கூறும்போது, "குப்பைகளை அகற்ற தற்போது தான் லாரிகள் அனுப்பப்பட்டுள்ளன. மாநகராட்சி கழிப்பறையில் இருந்து நீர் வெளியேறுவது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago