சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்தே பிறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பிணவறை பணியாளர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் மசூத் - சவுமியா தம்பதி. இத்தம்பதியினருக்கு டிசம்பர் 6-ம் தேதி, மிக்ஜாம் புயல் பாதிப்பின் காரணமாக நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. பெரும் போராட்டத்துக்குப் பின்னர், புளியந்தோப்பு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சவுமியாவை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்குள்ள மருத்துவமனை பூட்டியிருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து சவுமியாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காவல் துறை உதவியுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு, மருத்துவர்களும், பணியாளர்களும் இருந்தபோதும், மருத்துவமனையில் மின்சார வசதி இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, சவுமியா ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு சவுமியாவுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
அங்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தை மசூத் - சவுமியா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் பிணவறை பணியாளர்கள் இறந்த குழந்தையை முறையாக துணிகளைச் சுற்றி பெற்றோரிடம் ஒப்படைக்காமல், அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அட்டைப் பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட குழந்தையை அவரது தந்தை எடுத்துச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வந்தது.
» “காங்கிரஸ் குறித்த உள்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டவசமானது” - மாணிக்கம் தாகூர்
பணியாளர் சஸ்பெண்ட்: பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்த குழந்தையின் உடலை சரியான முறையில் ஒப்படைக்காத பிணவறை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிணவறை பணியாளர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்ப்டடுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, பன்னீர்செல்வம் பணியிடை நீக்கத்தில் இருப்பார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி கூறுகையில், “இறந்த குழந்தையை பிணவறையில் இருந்து கொடுப்பதற்கு லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இச்சம்பவம் தொடர்பாக, குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரிடமும் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. இறந்தே பிறக்கும் குழந்தைகளின் உடலை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொடுக்க வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதனிடையே, “நாட்டிலேயே மருத்துவக் கட்டமைப்புக்காக அதிகம் நாடப்பட்ட தமிழகம் இன்று ஊழல் திமுக அரசால் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது” என்று சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தந்தை சொல்வது என்ன? - இறந்த குழந்தையின் தந்தை மசூத் கூறியது: “டிசம்பர் 6-ம் தேதியன்று காலையில் ஒரு 11 மணிக்கு எனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த வலி அவ்வப்போது வந்துவந்து போனதால், சரியாகி விடும் என்று நினைத்தோம். ஆனால், வலி அதிகமாக இருந்ததால், ஆம்புலன்ஸுக்கு போன் செய்தோம். ஆனால், அன்று போன் போகவில்லை. அதுமட்டுமின்றி, வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியிருந்ததால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
அவர்கள் மீதும் குறை சொல்ல முடியாது. காரணம், போன் போகவில்லை, கரன்ட் இல்லை, நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து போன் செய்ய முயற்சித்தும், எதுவும் நடக்கவில்லை. உடனே நான் வீட்டைவிட்டு வெளியே சென்று வாகனங்கள் ஏதாவது கிடைக்குமா என்று பாரத்து வந்தேன். அப்போது என் கழுத்து வரை தண்ணீர் இருந்தது. எனது மனைவியையும் அழைத்துச் சென்றிருக்க முடியாது, அவ்வளவு தண்ணீர் கிடந்தது. பின்னர், வீடு திரும்பியபோது வீட்டில் ஒரே பெண்கள் கூட்டம். குழந்தை இறந்து பிறந்துவிட்டதாகவும், என்னை உள்ளே செல்ல வேண்டாம் என்றும் கூறினா். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸை அழைக்க முயற்சித்தனர். ஆனாலும், அவர்களை போன் வேலை செய்யாததால் தொடர்புகொள்ள முடியவில்லை. உடனே, எனது மனைவியை மட்டுமாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கொண்டு வந்தோம்.
தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால், மீன்பாடி வண்டியில் வைத்துக்கொண்டு ஜி-3 மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அது மூடியிருந்தது. எனவே, அருகில் இருந்த முத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் அனுமதிக்கவில்லை. பிறகு, பெண் காவலர் ஒருவரிடம் உதவி கோரினேன். அந்தக் காவலர் சொல்லி, எனது மனைவியை அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அப்போது அவர்கள், குழந்தையை சுத்தப்படுத்தி கொடுத்தனர்.
மேலும், எனது மனைவியின் வயிற்றில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினா். ஆனால், மின்சாரம் இல்லாததால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அந்தப் பெண் காவல் அதிகாரி அனுப்பி வைத்தார். அதேபோல், குழந்தையை அட்டைப் பெட்டியில்தான் தர வேண்டும். காரணம், இறந்து பிறந்த குழந்தை என்பதால், தூக்க முடியாது. அதேபோல், குழந்தையை துணியில் சுற்றித் தந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி தரவில்லை.
அதேபோல், வெளியாள் ஒருவர் 2500 ரூபாய் கொடுத்தால், குழந்தையை துணியில் சுற்றித் தருவதாக கூறினார். மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் யாரும் என்னிடம் பணம் கொடுக்க வேண்டும் என கூறவில்லை. மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் நின்றிருந்த ஒருவர்தான் 2500 ரூபாய் கொடுத்தால், வேலை நடக்கும் என்று கூறினார். நான் அவரை இந்த மருத்துவமனையில் பணியாற்றுபவர் என்று நினைத்துதான் இந்த விசயத்தை கூறினேன். அந்த நபர் வெளியாள் என்று தெரிந்திருந்தால், இதுகுறித்து நான் கூறியிருக்கவே மாட்டேன். மற்றபடி மருத்துவமனை பணியாளர் மீது தவறு எதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago