நாகை, காரைக்கால் மீனவர்கள் 25 பேர் கைது: படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அவர்கள் சென்ற 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், அதேபகுதியைச் சேர்ந்த பாஸ்கர்(40),நாகையன்(50), மாயவன்(42), பாக்கியராஜ்(40), சக்திவேல்(60), மணிகண்டன்(38), ராமச்சந்திரன்(38), கோதண்டபாணி(42), செல்வமணி(42), ராஜேஷ்(16), நாகை நம்பியார் நகர் ராமச்சந்திரன்(38), மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் திவ்யநாதன்(25) ஆகிய 12 மீனவர்கள் கடந்த 5-ம் தேதி இரவு நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதேபோல, காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆச்சியம்மாளுக்குச் சொந்தமான விசைப் படகில், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ்(44), செல்வம்(52), சந்தோஷ்(25), சரண்(27), திருப்பட்டினம் விஜயன்(35), வையாபுரி(25), அஜித்(25), சுகன்(24), நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை கலைமதி(38), கீச்சாங்குப்பம் ஸ்ரீநாத்(25), அக்கரைப்பேட்டை சிவநாதன்(42), மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி வைத்தியநாதன்(24), தரங்கம்பாடி அருள்மூர்த்தி(45) ஆகிய 13 மீனவர்களும் கடந்த 5-ம் தேதி காரைக்கால் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் 25 பேரும் நேற்று முன்தினம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறிமீனவர்கள் 25 பேரையும் கைதுசெய்து, காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவர்களது இரு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அங்கு நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தி, அனைவரையும் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீனவர்களின் உறவினர்கள், கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதையும், விசைப் படகுகளைப் பறிமுதல் செய்வதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE