வேளச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்து 6-வது நாளாக வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதி மக்களுக்கு 6-வது நாளாக நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக, வரலாறு காணாத அளவில், தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பாதிப்புக்குள்ளான வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தொடர்ந்து 6 வது நாளாக நேற்றும் வழங்கினார்.

சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி வளாகத்தில் இருந்து லாரிகளில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்று, அப்பகுதி கவுன்சிலர்கள் மூலம் வேளச்சேரி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் தெரு, ஜெகநாதபுரம் தெரு, ஊரணியம்மன் கோவில் தெரு, தண்டபாணி தெரு, உத்தேரி கரை ராஜத்தெரு, நடராஜன் தெரு, கபாலி தெரு, நியூ காலனி, பரமேஸ்வரன் தெரு, கோகிலன் தெரு, டான்சி நகர், வி.ஜி.பி.நகர், அன்னை இந்திரா நகர், வீனஸ் காலனி, மகாலெட்சுமி தெரு, தந்தை பெரியார் நகர், அன்பழகன் நகர், எம்.ஜி.ஆர். நகர் (கானகம்), கட்டபொம்மன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பரணி தெரு, சரஸ்வதி தெரு, யமுனா தெரு, பொன்னி தெரு, புத்தர் தெரு, ஸ்ரீனிவாச மினி ஹால் அருகில், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அரிசி, கோதுமை, பிரட், பிஸ்கெட் மற்றும் போர்வை ஆகிய நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில், அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நெடுஞ்சாலைத்துறை செயலர் பி.சந்திரமோகன், சென்னை துணை மேயர் மகேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் கே.ஆயிரத்தரசு ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE