எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரத்தில் உயர்நிலை குழு பரிந்துரையை ஏற்போம்: தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ள உயர்நிலைக் குழு பரிந்துரையை ஏற்று செயல்படுத்துவோம் என்று தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அது ஆற்றுநீர் பாய்ந்த நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவி கடலில் சேர்ந்தது. சுமார் 5 கி.மீ. தொலைவுக்குமேல் எண்ணெய் படலம் பரவி இருக்கிறது.

வெள்ளநீர் புகுந்த மீனவர் மற்றும் இருளர் குடியிருப்புகளில் எண்ணெய் படலங்கள் படிந்துள்ளன. ஏராளமான மீன்கள் இறந்து கிடக்கின்றன. மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளும் தடிமனான எண்ணெய் படலத்தால் பாழாகியுள்ளன. வீடுகளின் சுவர்களிலும் எண்ணெய் படிந்துள்ளது. இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது. மேலும், எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில், சுற்றுச்சூழல் துறை செயலர் மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

இக்குழு இன்று ஆய்வு செய்ய உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவொற்றியூர் நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம் பகுதியில் உள்ள எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்திருக்கும் எண்ணெய் படலங்களை பார்வையிட்டார். பின்னர், எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனிப் பகுதியில் எண்ணெய் படலம் கலந்த ஆற்றுநீர் குடியிருப்புப் பகுதியில் பாய்ந்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, மணலி மண்டலம் சடையங்குப்பம் பாலத்தில் இருந்து, கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் படலம் படர்ந்திருப்பதை பார்வையிட்டார். சடையங்குப்பம் மற்றும் இருளர் காலனி பகுதிகளில் வசிக்கும் மக்களிடமும் எண்ணெய் படல பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி, அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தலைமைச் செயலர் கூறும்போது, “எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டேன். இது தொடர்பாக ஆய்வுசெய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உயர்மட்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழு ஆய்வு செய்து அளிக்கும் பரிந்துரைகள் மற்றும் அதனடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்துவோம்” என்றார். இந்த ஆய்வின்போது, மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், மண்டல கண்காணிப்பு அலுவலர் எஸ்.திவ்யதர்ஷினி, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமைச்சர் ஆய்வு: தலைமைச் செயலரை தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், செயலர் சுப்ரியா சாஹூ ஆகியோர் நெட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, சிபிசிஎல் நிறுவன மேலாண் இயக்குநரை சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ சந்தித்து, அங்கு நடைபெற்றுவரும் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். எண்ணெய்படலத்தை அகற்றும் பணிகளைவிரைந்து மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE