திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் மூழ்கிய நல்லம்மன் கோயில்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அணைப்பாளையம் தரைப்பாலம், நல்லம்மன் கோயில் நீரில் மூழ்கின.

கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் மலை அடிவாரங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி, தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து வரும் நொய்யல் ஆறு, திருப்பூர் மாநகரின் மையப் பகுதி வழியாக கடந்து கரூர் மாவட்டத்துக்குள் நுழைகிறது.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்திருந்தது. நேரம் செல்ல, செல்ல வெள்ளம் பெருக்கெடுத்ததால், திருப்பூர் மாநகரிலுள்ள கல்லூரி சாலை, மங்கலம் சாலைகளை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. பாலத்தின் மேல் அதிகளவு நீர் சென்றதால், அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

அந்த பகுதியில், திருப்பூர் மாநகர மத்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாலையின் இருமருங்கிலும் இரும்பு தடுப்புகள் வைத்து, இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தரைப்பாலத்தை கடக்காத வகையிலும், பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லாத வகையிலும் போலீஸார் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுள்ளதுடன், தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், மங்கலம் அருகில் உள்ள நல்லம்மன் கோயில் தடுப்பணையில் வெள்ளம் பொங்கி வழிந்தது. இதனால், அணையின் நடுவில் உள்ள நல்லம்மன் கோயில் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. மேலும், கோயிலுக்கு செல்லக்கூடிய சிறு பாலமும் மூழ்கிவிட்டதால், பொதுமக்கள் யாரும் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE