சென்னை.
மூதறிஞர் ராஜாஜியின் பொது வாழ்க்கையை மிக விரிவாக ஆவணப்படுத்தும் நோக்குடன், தமிழ் திசைப் பதிப்பகம் ‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ என்கிற தலைப்பில் 800 பக்கங்கள் கொண்ட பெரும் பதிப்பு நூலினைத் தயாரித்துள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்நூலில், ராஜாஜியின் சமகாலத் தலைவர்கள், அவரது அமைச்சரவைச் சகாக்கள், அரசியல் ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்நூலில், ராஜாஜியுடைய அரசியல் வாழ்வின் இன்றியமையாத் தருணங்களை உயிரோட்டத்துடன் நினைவு கூறும் நூற்றுக் கணக்கான அரிய புகைப்படங்கள் ‘தி இந்து’ ஆவணக் காப்பகத்தின் பொக்கிஷ நூலகத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், டிசம்பர் 10ஆம் தேதியான இன்று, மூதறிஞர் ராஜாஜியின் 145ஆவது பிறந்த தினம் ஆகும். இதையொட்டி, நேற்று சென்னையில் ‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ நூலின் அட்டைப்பட முதல் தோற்றத்தை, டாக்டர் ஹெச்.வி.ஹண்டே - தமிழருவி மணியன் இணைந்து வெளியிட்டனர். இந்நிகழ்வில் தமிழருவி மணியன் பேசும்போது:
இன்றைய தலைமுறையின் நிலை
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
- என்று வள்ளுவப் பெருமகன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். ‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ என்கிற தமிழ் திசைப் பதிப்பகம் வெளியிடவிருக்கும் நூலின் அட்டைப்பட முதல் தோற்றத்தை, ஹண்டே வெளியிட அதை நான் பெற்றுக்கொண்ட இந்தத் தருணத்துடன் அக்குறளைப் பொருத்திப் பார்க்கிறேன். யார் எதை வெளியிடுவது என்பதில் கூட பொருத்தப்பாடு மிக முக்கியமானது. அதை இந்து தமிழ் திசை மிகச் சரியாகச் செய்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. ஏனென்றால் ராஜாஜியை முழுமையாக அறிந்தவர் ஹண்டே. அவர் மீது எல்லையற்ற அன்பு பூண்டவர். ராஜாஜியுடைய அன்புக்கும் உரியவராக இருந்தவர். சுதந்திரா கட்சியின் சார்பாக ராஜாஜியால் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்.
அப்படிப்பட்ட ராஜாஜிக்கு எளிமையும் நேர்மையும்தான் அவரது இரண்டு கண்கள். அவரைப் பின்பற்றி வாழும் ஹண்டே இன்றுவரை அதே எளிமையும் நேர்மையுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் ராஜாஜி நூலின் அட்டைப்பட முதல் தோற்றத்தை வெளியிட்டது மிகவும் பொருத்தமானது. அதேவேளை, தமிழ் திசை பதிப்பகத்தின் இந்தப் பதிப்புப் பணி குறித்தும் நான் சொல்லியாக வேண்டும். இன்றைக்குத் தமிழில் வெளியாகக் கூடிய நாளிதழ்களையும் பருவ இதழ்களையும் பருந்துப் பார்வையாகப் பார்ப்பவன் நான். சீரழிந்த நிலையிலும் தமிழ்ச் சமூகத்தின் மனநலனைக் காப்பதற்காக, சமூக அக்கறையுடன் நாளிதழை நடத்தி வருகிறது இந்து தமிழ் திசை. இன்றைய இளைய தலைமுறைக்கு ராஜாஜியை தெரியவே தெரியாது. இளைய தலைமுறைக்குத் தெரிந்தவர்கள் எல்லாம், அழுக்குப் படிந்த அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் மட்டும்தான். இவர்களைக் கடந்து, நம் காலத்தின் வரலாறு என்ன என்பதைக் கூடத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் பெரும்பாலானவர்களிடம் இல்லை.
ஆனால், சீனாவுக்குப் போய்ப் பாருங்கள்; அங்கே ‘மா சே துங்’கின் நெடும் பயணத்தை அறியாத ஒரு மாணவனைக் கூட நாம் பார்க்க முடியாது. ரஷ்யாவுக்குப் போனால் தொழிலாளர்களின் புரட்சியையும் புரட்சியாளர் லெனினையும் அறியாத ஒரு மாணவனைக் கூடக் காண முடியாது. நம் நாட்டில் நிலைமை அப்படியில்லை. சுதந்திர தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களிடம் சென்னை தொலைக்காட்சி கேள்விகள் கேட்டு ஒரு நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியது. நான் படித்த சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து வெளியே வரும் ஒரு மாணவனிடம் ஒலி வாங்கியை நீட்டி ‘காந்தியின் முழுப்பெயரைச் சொல்லுங்கள்’ என்று கேட்கிறார் தொகுப்பாளர். அதற்கு அந்த மாணவர் ‘எனக்குப் பக்கத்து வீட்டுக்காரர் பெயரே தெரியாது’ என்று பதில் சொல்லிவிட்டுப் போகிறார். இன்னொரு மாணவியிடம் ‘மகாத்மா காந்தியின் மனைவியுடைய பெயரைச் சொல்லுங்கள்’ என்று கேட்கிறார். அதற்கு அவர் ‘ எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
இதுபோன்ற தலைமுறையில் வரலாற்றை ஆர்வமுடன் படிக்க முன்வரும் மாணவர்களிடம் ‘ராஜாஜி’யை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைப்பது காலத்தின் மிக முக்கியமான தேவை. அதுவும், ‘இன்றைய அழுக்குப் படிந்த, அரசியலைப் பார்த்து வளர்ந்திருக்கும் அவர்களிடம், ‘எளிமையும் நேர்மையும் உண்மையும் மக்கள் நலன் சார்ந்த சிந்தனைக்கு மட்டுமே முன்னுரிமை தந்தவர்களால் நேற்றைய அரசியல் எப்படி இருந்தது என்பதைக் கொண்டு சேர்ப்பதைவிட ஒரு சமூகப் பணி, இதழியல் பணி இருக்க முடியாது.
ராஜாஜியின் பேனா
இன்றைக்கு ஒருவருடைய பேனாவைப் பற்றி பெருமை பொங்கப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாறாக, ராஜாஜியின் பேனா எத்தனை வலிமையானது என்பதற்கு, அந்தக் காலத்தில் சுயராஜ்யா பத்திரிகையில் அவர் எழுதிய, தலையங்கங்கள், கட்டுரைகளைப் படித்தால் அவரது அரசியல் தீர்க்கதரிசனங்களையும் கொள்கையில் கொண்டிருந்த உறுதியையும் காண முடியும். அவர் ஆங்கிலத்தில் ‘சுயராஜ்யா’வில் எழுதிய அத்தனை கட்டுரைகளும் இன்றைக்கு ‘ரீடர்’ஆகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இன்றைய பொருளாதார வளர்ச்சி, மாற்றங்கள், சிதைவுகள் ஆகியவற்றை அவர் அன்றைக்கே தெளிவாக எழுதிவிட்டார். இந்தியப் பொருளாதாரம் எழுந்து நிற்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கெல்லாம் அவர் எழுதிக் குவித்திருக்கிறார். ‘கோட்டா - பர்மிட் - லைசென்ஸ் ராஜ்’ என்கிற சொல்லாக்கத்தை உருவாக்கியவரே ராஜாஜிதான். அதை முற்றிலும் ஒழிப்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது. அதை ஒழிப்பதற்கு அவர் பேனா எனும் ஆயுதத்தை எடுத்தார். ராஜாஜி என்றால் தாம் ஏற்றுக்கொண்டு நம்பிய கொள்கையில் எள் மூக்கின் அளவும் சமரசம் காணாதவர். உலகமே தனக்கு எதிராக வந்து நின்றாலும் ‘இவை சரியென்றால் இயம்புவது என் தொழில், தவறென்றால் எதிர்ப்பதென் வேலை’ என்கிற கண்ணதாசனின் கவிதை வரிகள் உண்டு. அதற்கு நேரடி சாட்சி வேண்டுமானால் அவர் ராஜாஜி. தன் வாழ்நாளின் இறுதி வரையிலும் இதிலிருந்து இம்மியளவும் அவர் மாறவில்லை.
காந்தியை எதிர்த்தவர்
அவ்வளவு ஏன், காந்தியடிகள் “எனது மனசாட்சியின் காவலர்’ என்று ராஜாஜியைக் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட காந்தியையே எதிர்த்தவர் ராஜாஜி. 1942இல் பாகிஸ்தான் பிரச்சினை வந்தபோது, நாடு இரண்டாகப் பிரிய வேண்டும் என்கிற நிலையில், அவர் காந்திக்கு எதிராகவே நின்றார். தேசிய அரசியல், மாநில அரசியல் இரண்டிலுமே தனது தொலைநோக்குப் பார்வையால் அளந்த ஆளுமையான ராஜாஜியின் பொதுவாழ்வை நேற்றை அரசியல் வரலாறாக வாசிக்க முன்வரும் மாணவர்களிடம் ‘ராஜாஜி’யை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைப்பது காலத்தின் மிக முக்கியமான தேவையும் இதழியல் பணியும் ஆகும். அதை இந்து தமிழ் திசை நிறைவேற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.
நான் ராஜாஜியின் மாணவன்!
அவரைத் தொடர்ந்து ஹெச்.வி. ஹண்டே பேசும்போது: “காமராஜரால் தமிழருவி என்று புகழப்பட்ட தூய காந்தியரான தமிழருவி மணியனுடன் இந்நூலின் அட்டைப்பட முதல் தோற்றத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நூலில், ராஜாஜியை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக அவர் விஸ்வரூபம் எடுத்து நின்ற முதல் 30 ஆண்டுகளின் போராட்ட வாழ்வை விரிவான கட்டுரையாகத் தகுந்த ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறேன். அதேபோல் எனது விரிவான நேர்காணலில் ராஜாஜிக்கும் எனக்குமான தோழமையும் ஆசிரியர் - மாணவர் உறவு எப்படி அமைந்தது என்பதையும் மனம் திறந்து பேசியிருக்கிறேன். தேசப் பிரிவினையின் போது ராஜாஜி அளித்த ‘ஸி.ஆர்.ஃபார்முலா’ இல்லாமல் போயிருந்தால் நமக்கு மேற்கு வங்காளமும் கிழக்கு பஞ்சாப் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் கிடைத்திருக்காது. அதைப் பற்றி இந்தத் தருணத்தில் பகிர விரும்புகிறேன்.
‘ஸி.ஆர்.ஃபார்முலா’வின் முக்கியத்துவம்
ராஜாஜி தேசப் பிரிவினையை விரும்பவில்லை. எனினும் அது ஒருகாலும் தவிர்க்க முடியாத ஒன்று என்று திடமாகக் கருதினார். முகமது அலி ஜின்னா, நாட்டை இரண்டாகப் பிரிக்க விரும்புவதை காந்தியே நினைத்தாலும் தடுக்க முடியாது என்று சொன்னார். அப்போது ராஜாஜியை ’தேசத்துரோகிபோல்’ பார்த்தனர். ஆனால், ராஜாஜி கூறியதுதான் உண்மை என்பதைப் பின்னர் காலம் நிரூபித்தது. தேசப் பிரிவினைத் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக இருக்கும் என்று அவர் உணர்ந்துகொண்டதும் ‘ஸி.ஆர் ஃபார்முலா 1944’ என்கிற ஒன்றை உருவாக்கினார். ஏன் அதை உருவாக்கினார் என்றால், வங்காளமும் பஞ்சாப்பும் மேலும் இரு மாநிலங்களும் பாகிஸ்தானுக்குப் போய்விடும் நிலை இருந்தது. ஆனால், அந்த மாநிலங்களில் சரி பாதி அளவுக்கு இந்துக்கள் வாழும் பகுதிகள், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் எனப் பலவாறாக இருந்தன. அதனால்தான் எந்த மதத்தினர், எந்தப் பகுதியில் எவ்வளவு வசிக்கின்றனர் என ‘ஏ, பி, சி’ என்கிற பகுப்பின்படி அவர் தனது ஃபார்முலாவை நேர்மையாக உருவாக்கியிருந்தார்.
இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்திருந்த நேரத்தில் 1945, செப்டம்பரில் இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், பழமைவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, இந்தியாவின் எதிரி என்று வருணிக்கப்பட்ட வின்ஸ்டன் சர்ச்சில் தோல்வி அடைந்தார். நல்வாய்ப்பாக, இந்தியாவின் நண்பர் என்று வருணிக்கப்பட்ட, தொழிலாளர் கட்சியின் வெற்றியால் அதன் தலைவர் கிளெமண்ட் அட்லீ இங்கிலாந்தின் பிரதமர் ஆனார். அவர் பொறுப்பேற்றதுமே “ஹிட்லர் என்கிற சர்வாதிகாரிக்கு எதிராகப் போராடி, நமது சுதந்திரத்தை நிலைநாட்டிக்கொண்ட இங்கிலாந்து நாடு, 40கோடி இந்தியர்களை அடிமைகளாக வைத்துக்கொள்வது நியாயமற்றது. எனவே இந்தியர்களின் கைகளுக்கு முழுமையாக அதிகாரத்தை மாற்றம் செய்வது என முடிவெடுத்திருக்கிறேன்” என்ற ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ அவையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து 1946 ஜனவரி அமைந்த 11 மாகாண அரசுகளில் 4இல் முஸ்லீம் ஆட்சி அமைத்தது. வங்காளம், பஞ்சாப், சிந்த், வடமேற்கு ஆட்சிப் பகுதி ஆகியனதான் அந்த 4 மாநிலங்கள். அந்த 4 மாநிலங்களுமே நாம் பாகிஸ்தானுடன் போகவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின.
இப்படிப்பட்ட நிலையில்தான், தாம் உருவாக்கிய ‘ஸி.ஆர்.ஃபார்முலா 1944’ஐ காந்தியடிகளிடம் கொண்டுபோய் கொடுத்து, இதை முகமது அலி ஜின்னாவிடம் நடத்தும் பேச்சு வார்த்தையின்போது அவரிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்த ஃபார்முலாவின்படி ‘இந்துக்கள் அதிகமாக வசிக்கும் மேற்கு வங்காளத்தையும் கிழக்கு பஞ்சாப்பையும் வடமேற்கு ஆட்சிப் பகுதி உள்ளிட்ட மேலும் இரு ஆட்சிப் பகுதிகளில் உள்ள பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாத மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை இந்தியாவுடன் தக்க வைத்துக்கொள்ள முடியும்; அதற்கேற்ற ஃபார்முலா இது’ என்பதையும் காந்தியிடம் எடுத்துக்காட்டி, அதற்கு ஜின்னாவை சம்மதிக்க வைக்கும்படிக் கேட்டுக்கொண்டார். காந்திஜி உண்மை நிலையைப் புரிந்துகொண்டிருந்த சமயம் அது. நம்பிக்கையுடன் ஜின்னாவிடன் ‘ஸி.ஆர்.ஃபார்முலாவைக் கொடுத்தபோது, அதை வாங்கிப் படித்துப் பார்த்த ஜின்னா, காந்தியின் முன்பாகவே அதைக் கிழித்துப் போட்டார்.
இதற்கிடையில் இந்தியாவுக்கான சுதந்திரத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லீ, இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக மௌண்ட் பேட்டர்னை நியமித்து இந்தியாவுக்கு அனுப்பினார். ராஜாஜி துணிச்சலோடு போய் லார்ட் மவுண்ட் பேட்டர்னை சந்தித்து ‘ஸி.ஆர். ஃபார்முலா’வை அவர் கையில் கொடுத்தார். அதை ஆழ்ந்து புரிந்துகொண்ட மவுண்ட் பேட்டர்ன், ‘நீங்கள் ஒரு தென்னிந்தியர் என்பதால் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால், இதனை என்னிடம் கொடுத்துவிடுங்கள். இதன்பின்னர் இது எனது ஃபார்முலாவாக மாறிவிடும்’ என்று அதை வாங்கி, அதன்படியே செயல்படுத்தினார். ராஜாஜி மட்டும் இதில் இத்தனை தீர்க்கதரிசனத்தோடும் நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் அக்கறையோடும் தனது பார்முலாவை உருவாக்கியிருக்காவிட்டால், இன்றைக்கு நான்கு மாநிலங்கள் நம்மிடம் இருந்திருக்காது. தேசம் கட்டி எழுப்பப்படுவதில் அடிக்கல்லாகச் செயல்பட்ட ராஜாஜியின் அரசியல் வாழ்க்கை பெரும் சாதனைகளைக் கொண்டது. தியாகங்களால் நிறைந்தது. வளமான எதிர்காலத்துக்கான கொள்கைகளைக் கொண்டது. அத்தகைய செயல்வீரரான ராஜாஜியை, ‘ராஜாஜி: ஒரு தேசிய சகாப்தம்’ என்கிற இந்த நூல் இதற்கு முன்பு இல்லாத வகையில் முழுமையாக ஆவணப்படுத்தியிருப்பது இந்து தமிழ் திசை ஆசிரியர் குழுவின் உழைப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறினார். நிகழ்வில் தமிழ் திசைப் பதிப்பக தலைமைப் பிரதிநிதி எம்.ராம்குமார், நூலின் தொகுப்பாசிரியர் ஆர்.சி.ஜெயந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago