சேதம் அடைந்த திருத்தணி முருகன் கோயிலின் மலை பாதையை விரைந்து சீரமைக்க அமைச்சர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: மிக்ஜாம் புயலின் போது சேதம் அடைந்த திருத்தணி முருகன் கோயில் மலைப் பாதையை விரைவாக சீரமைக்க அதிகாரிகளுக்கு, அமைச்சர் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக அதிகன மழை பெய்தது. இதனால், திருத்தணி முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதை சாலையின் பக்கவாட்டுப் பகுதி மற்றும் தடுப்புச் சுவர் சுமார் 12 மீட்டர் அகலம், 8 மீட்டர் உயரத்துக்கு சேதம் அடைந்தது.

இதையடுத்து, அப்பகுதியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பாதிப்படைந்த பகுதியை விரைவில் சரி செய்து, பக்தர்களுக்கு சீரான சாலை போக்குவரத்தை ஏற்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க.தீபா, அறநிலையத் துறை இணை ஆணையர் ரமணி, நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநர் அன்பரசு, திருத்தணி வட்டாட்சியர் மதன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE