மக்களவை தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: இபிஎஸ் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்களவை தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் துறைமுகம்,ஆர்.கே.நகர், திருவொற்றியூர், அண்ணாநகர் ஆகிய தொகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அவற்றில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னதாக அவர் திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை முதல்வர் அலட்சியப்படுத்தி மெத்தனமாக இருந்ததால், சென்னையில் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர். திமுக அரசு மக்களுக்கு சரியாக உதவவில்லை.மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்களவை தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

கோவளம், அடையாறு, கொசஸ்தலை ஆகிய 3 ஆறுகளைசுத்தப்படுத்தி, 2 ஆயிரத்து 400 கிமீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் 5 ஆண்டு திட்டத்தை அதிமுக கொண்டுவந்தது. அதில் 1220 கிமீ நீளத்துக்கு வடிகால் கட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதை கிடப்பில் போட்டுவிட்டு, தங்கள் பணியை சரியாக செய்யாமல் இப்போது எங்களை குறை கூறுகின்றனர்.

திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இவற்றுக்கு உரிய நிவாரணம் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE