லிப்டில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு @ சென்னை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). கந்தன் சாவடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் ஸ்ரீநாத் (22). பி.காம் முடித்த இவர், துரைப்பாக்கம் பர்மா காலனி 2-வது மெயின் ரோட்டில் உள்ள, மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தின் பேக்கிங் பிரிவில் கடந்த 3 மாதங்களாகப் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், பொருட்களை வழக்கம் போல பேக்கிங் செய்த ஸ்ரீநாத், டெலிவரிக்காக அந்த பொருட்களை லிப்ட் மூலம் தரை தளத்தில் இருந்து மேல் தளத்துக்கு எடுத்து சென்றார்.

பொருட்களை ஏற்றிச் செல்லும் லிப்ட் என்பதால், அதற்குகதவுகள் கிடையாது. இந்நிலையில், பொருட்களை ஸ்ரீநாத் லிப்டில் ஏற்றி செல்லும் போது, அவர் கையில் வைத்திருந்த ரசீது கீழே விழுந்தது. இதையடுத்து, லிப்டில் நின்று கொண்டு, தலையை வெளியே நீட்டியபடி அந்த ரசீதை எடுப்பதற்காக ஸ்ரீநாத் முயற்சித்தார்.

அப்போது, லிப்ட் மேலே சென்று கொண்டிருந்ததால், ஸ்ரீநாத்தின் தலை மேல் சுவற்றில் பலமாக இடித்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். இதைப் பார்த்த ஊழியர்கள், லிப்ட்டை உடனடியாக நிறுத்தினர். பின்னர் ஸ்ரீநாத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்ரீநாத் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் செந்தில் முருகனின் விசாரணை அடிப்படையில் நிறுவன உரிமையாளர், மேலாளர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE