வத்தலகுண்டு அருகே தொடர் மழை: கிராமங்களுக்குள் புகுந்த மழை நீர்

By செய்திப்பிரிவு

வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே தொடர் மழையால் ஊருக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ப.விராலிப்பட்டி கிராமப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர்ந்து கன மழை பெய்தது. இதன் காரணமாக, ஊருக்கு அருகேயுள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விராலிப் பட்டி காளியம்மன் கோயில் அருகே இருந்த பழமை வாய்ந்த ஆலமரம் உயர் அழுத்த மின் கம்பத்தில் சாய்ந்ததில், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனிடையே குண்டலபட்டி கிராமத்தில் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. ஊருக்கு அருகே இருந்த விளை நிலத்தில் தண்ணீர் தேங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. பண்ணைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி குடிநீர் திட்ட சுற்றுச்சுவர் இடிந்து விளை நிலத்தில் விழுந்ததில் பயிரிடப்பட்ட தென்னை மற்றும் நெல் பயிர்கள் சேதம் அடைந்தன.

வருவாய்த்துறை, மின்வாரிய ஊழியர்கள் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிக்குச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE