கோவை - மேட்டுப்பாளையத்தில் கனமழை: வாழைகள் சேதம்; வீடுகளை சூழ்ந்த மழைநீர்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையால் வாழைகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. வீடுகளுக்குகள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் நகரப் பகுதி, சிறுமுகை, காரமடை, பெள்ளேபாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளி்ல் நேற்று கனமழை பெய்தது. இந்த கனமழையால் மருதூர் ஊராட்சிக்குட்பட்ட ஏழுசுழி தடுப்பணை நிரம்பியது. மேலும், நீர்க்கசிவும் ஏற்பட்டது. தகவல் அறிந்த மருதூர் ஊராட்சி நிர்வாகத்தினர் மணல் மூட்டைகளை அடுக்கி நீர்க்கசிவுகளை சரி செய்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் மேட்டுப்பாளையத்தில் கனமழை தொடங்கி, இன்று காலை வரை பெய்தது. இதனால் சிறுமுகை நகரத்தில் இருந்து வையாளிபாளையம், அன்னதாசன்பாளையம், பசூர், காரனூர், அக்கரை செங்கப்பள்ளி, புளியம்பட்டி பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அச்சாலைகளே ஆறுபோல் காட்சியளித்தது. சிறுமுகையை அடுத்த இலுப்பநத்தம் ஊராட்சியில் பெய்த கனமழையால் சிறுமுகை சாலை மேடூர் பகுதியில் சாலைகளே தெரியாத அளவுக்கு மழைநீர் சென்றது.

சுற்றுப்புறங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வந்த சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் சில மணி நேரங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். அன்னதாசம்பாளையத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் நீரில் மூழ்கின.

சிறுமுகை திம்மனூர் பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. கனமழையால் இக்குளம் நிரம்பி , உபரி நீர் அங்குள்ள தடுப்பணை வழியாக வெளியேறியது. இவ்வாறு வெளியே நீர் அதற்கு அருகே வாசுதேவன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரது தோட்டத்தில் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. தோட்டத்தில் தங்கியிருந்த கருப்பன், கமலா தம்பதியர் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர் . மேலும், அவர்கள் வளர்த்து வந்த 6 பசுக்களும் நீரில் சிக்கின. அவையும் உயிருடன் மீட்கப்பட்டது. அருகேயுள்ள அண்ணா நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

மழையளவு விவரம்: மாவட்ட நிர்வாகத்தினர் வெளியிட்ட அறிக்கையின்படி மழையளவு விவரம் (மி.மீ), அன்னூரில் 18.40, மேட்டுப்பாளையத்தில் 8, சின்கோனாவில் 14, சின்னக்கல்லாறில் 49, வால்பாறை பி.ஏ.பியில் 31, வால்பாறை தாலுக்காவில் 30, சோலையாறில் 10, ஆழியாறில் 41, சூலூரில் 80, பொள்ளாச்சியில் 20, கோவை தெற்கில் 78, பீளமேட்டில் 108.20, வேளாண் பல்கலை.யில் 46, பி.என்.பாளையத்தில் 9, பில்லூர் அணையில் 10, வாரப்பட்டியில் 36, தொண்டாமுத்தூரில் 20, சிறுவாணி அடிவாரத்தில் 12, மதுக்கரையில் 40.50, போத்தனூரில் 43.80, மாக்கினாம்பட்டியில் 19, கிணத்துக்கடவில் 40, ஆனைமலையில் 52 மழை பெய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE