சென்னையில் மழைநீர் வெளியேற்றும் பணிக்கு கோவையில் இருந்து 50+ பம்ப்செட் அனுப்பிவைப்பு

By இல.ராஜகோபால்

கோவை: சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இப்பணிக்கு கோவை தொழில் அமைப்புகள் சார்பில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெரிய பம்ப்செட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்திய பம்ப் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (இப்மா) தலைவர் கார்த்திக் மற்றும் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் விக்னேஷ் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

சென்னையில் மழைநீர் வெளியேற்றும் பணிகளுக்காக முதலில் டீசலில் இயங்கக்கூடிய பெரிய பம்ப்செட்கள் மாநகராட்சியிடம் வழங்கப்பட்டன. இந்த வகை பம்ப்செட்கள் தற்போது கோவையில் பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தி செய்வதில்லை. ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பம்ப்செட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைதவிர்த்து, 40 ஹெச்பி மற்றும் அதற்கு மேல் குதிரைத் திறன் கொண்ட மின்சாரத்தில் இயங்கும் 40-க்கும் மேற்பட்ட பம்ப்செட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பல்வேறு அரசு துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக மழைநீரை வெளியேற்றும் பணிகளுக்கு கோவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள பம்ப்செட்கள் பெரிதும் உதவி வருகின்றன. பம்ப்செட்கள் மட்டுமின்றி தண்ணீரை வெளியேற்ற உதவும் பைப் உள்ளிட்ட இதர பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் மேலும் பம்ப்செட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும் பணிகளில் கோவை தொழில்முனைவோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எதிர்வரும் நாட்களிலும் இதுபோன்ற பணிகள் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE