திண்டுக்கல்லில் பாஜக - காங்கிரஸ் கட்சியினர் மோதல்: இரு தரப்பினரும் கல்வீச்சு; 150 பேரை கைது செய்த போலீஸார்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாஜக-காங்கிரஸ்கட்சியினர் இடையே திடீரெனமோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இரண்டு தரப்பைச் சேர்ந்த 150 பேரை போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் மாநகர காங்கிரஸ்கட்சித் தலைவர் துரை.மணிகண்டன், சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பதிவு செய்ததாக புகார்தெரிவித்து, அவரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி பாஜகவினர் நேற்று முன்தினம் திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் துரை.மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், துரை.மணிகண்டனை கைது செய்ய வலியுறுத்தி நேற்று மாலை பாஜகவினர் திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகேயுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். இதன்படி, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன் தலைமையில் பாஜகவினர் திரண்டதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையறிந்த காங்கிரஸ் கட்சியினர், அவர்களது கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

பாஜகவினர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் நோக்கி முன்னேற முயன்றபோது, அவர்களைப் போலீஸார் தடுத்தனர். பாஜகவினர் வருவதைப் பார்த்த காங்கிரஸார் அலுவலகத்தில் இருந்து வெளியேவந்து, பாஜகவினருக்கு எதிராக முழக்கமிட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திடீரென காங்கிரஸ் அலுவலகம் மீது பாஜகவினர் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர். கல் வீசியவரை பிடிக்க காங்கிரஸ் கட்சியினர் முயன்றபோது, இரு தரப்பும் கொடிகள் கட்டியிருந்த கம்புகளைக் கொண்டு மோதிக் கொண்டனர். மேலும், காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவினரை நோக்கி கல்வீசினர். இதையடுத்து, பாஜகவினர் 100 பேர், காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் என மொத்தம் 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE