திருவள்ளூர் | ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதம்: நிவாரணம் கோரும் விவசாயிகள்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி, எல்லாபுரம் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் சம்பா பருவத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை, மிக் ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை கொட்டித் தீர்த்தது.

இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள 1,146 ஏரிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன; அதுமட்டுமல்லாமல், பூண்டி, புழல், சோழவரம், கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஆகிய சென்னை குடிநீர் ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட நீர், ஆந்திர மாநிலம்- பிச்சாட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் வரும் மழைநீர் உள்ளிட்டவையால் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு மற்றும் கூவம் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு நீர் நிலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீரால், ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

பிரளயம்பாக்கம் ஏரி மற்றும் தத்தமஞ்சி உள்ளிட்ட ஏரிகளின் கரைகளிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரளயம்பாக்கம், சோமஞ்சேரி, தத்தைமஞ்சி, வாயலூர், கோளூர், அண்ணாமலைச்சேரி, பெரிய கடம்பூர், தேவம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வயல்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதே போல், திருவள்ளூர் மற்றும் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட வெள்ளியூர், விளாப்பாக்கம், காக்கவாக்கம், தாராட்சி, புல்லரம்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, விவசாயிகள் பேசும்போது, “திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால் பொன்னேரி, மீஞ்சூர், எல்லாபுரம், திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ளோம். ஆகவே, வேளாண் துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தி, மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE