மழை நின்று 4 நாட்களாகியும் காட்டுப்பாக்கம் பகுதிகளில் வடியாத மழைநீர்

By செய்திப்பிரிவு

பூந்தமல்லி: மிக்ஜாம் புயல் காரணமாக பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4-ம் தேதி மழை கொட்டியது. இதனால், பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம்- அம்மன் நகர், சி.டி நகர், கோவிந்தராஜ் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழை விட்டு 4 நாட்கள் ஆகியும் காட்டுப்பாக்கம்- அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்நீரை அகற்றும் பணி, மின் மோட்டார்கள், டீசல் மோட்டார்கள் என 25 மோட்டார்கள் மற்றும் 6 டிராக்டர்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இருப்பினும், மழை நீர் வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. அவ்வாறு சூழ்ந்துள்ள மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. பூந்தமல்லி, மாங்காடு உள்ளிட்ட பகுதியில் இருந்து தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மழைநீர் வருவதால் காட்டுப்பாக்கம் பகுதியில் மழைநீர் குறையாமல் உள்ளது என பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும், காட்டுப்பாக்கத்தில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால், பலர் வீடுகளை பூட்டி விட்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆகவே, காட்டுப்பாக்கத்தில் தேங்கியுள்ள மழை நீரை துரிதமாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE