நீர்நிலைகளில் உள்ள மின்கம்பங்களை சீரமைப்பது மின் வாரிய ஊழியர்களுக்கு சவாலான பணி: மின் தடைக்கு இதுவே காரணம் என தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: நீர்நிலைப் பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் ஏறி சீரமைக்கும் பணியை மேற்கொள்வது மின்வாரிய ஊழியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதுவே சில இடங்களில் மின் விநியோகம் சீராகாமல் இருப்பதற்குக் காரணம் என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ‘மிக்ஜாம்’ புயல் கனமழையால் சென்னையில் பாதிக்கப்பட்ட மொத்தமுள்ள 1,812 ஃபீடர்களில் 1,610 மின்னூட்டிகள் உடனடியாக சீரமைக்கப்பட்டன. மீதமுள்ள 202 ஃபீடர்கள் சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல், மழைநீர் சூழ்ந்ததால், 230 கி.வோ. கிட்ஸ் பார்க் துணை மின் நிலையம், 110 கி.வோ.பெரும்பாக்கம் துணை மின்நிலையம் மற்றும் மணலி துணை மின்நிலையங்களின் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த மின்நிலையங்களில் தண்ணீர் வடிந்ததையடுத்து தற்போது செயல்படத் தொடங்கி உள்ளன. எனினும், போரூர், பெரும்பாக்கம், சிப்காட், சிறுசேரி, முடிச்சூர், பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களின் சில பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் ஈரப்பதம் உள்ளதால், மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு பணியில் ஈடுபடுவது பெரும் சவாலாக இருப்பதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

விஷ பூச்சிகள் அபாயம்: ‘மிக்ஜாம்’ புயல் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு செவ்வாய்க்கிழமை காலை முதல் மின்விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வெள்ளம் புகுந்த பெருங்குடி, எண்ணூர், மணலி, பாடி, ஆவடி உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் வெள்ளம் வடிந்ததையடுத்து தற்போது அவைசெயல்பாட்டுக்கு வந்துள்ளன.

எனினும், தாம்பரம் முடிச்சூர், பள்ளிக்கரணை, பெருங்குடி உள்ளிட்டபகுதிகளில் சில இடங்களில் மின்விநியோகம் வழங்கப்படவில்லை. இதற்குக் காரணம், அங்கு மழை நீர் இன்னும் வடியவில்லை. அத்துடன், பெரும்பாலான மின்கம்பங்கள் நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்துள்ளன. எனவே, மின்கம்பத்தை நெருங்குவதே சவாலாக உள்ளது. அத்துடன், உயிரை பணயம் வைத்து அவற்றில் ஏறி சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டி உள்ளது. சில மின்கம்பங்களின் அடிப்பாகம் மழை நீரில் சேதம் அடைந்துள்ளது. அத்துடன், நீர் நிலைகளில் பாம்புகள், விஷப் பூச்சிகள் உள்ளிட்டவை உள்ளன. இதனால் நீரில் நடந்து சென்று சேதமடைந்த மின் கம்பங்களில் ஏறுவதற்கு அச்சமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை நகரில் மின்கம்பங்களை சீரமைக்க ஏணி பொருத்தப்பட்ட வாகனங்கள் உள்ளன. இதனால், எளிதாக மின்கம்பத்தின் மீது ஏறி சீரமைக்க முடியும். ஆனால், நீர்நிலைப் பகுதிகளில் உள்ள மின்கம்பங்களுக்கு இந்தவாகனங்களைக் கொண்டுசெல்லமுடியாது. எனவே, மின்கம்பங்களை சீரமைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனினும், மின்வாரிய ஊழியர்கள் துணிச்சலாக இப்பணியைமேற்கொண்டு வருகின்றனர். எனவே, விரைவில் அனைத்துப்பகுதிகளிலும் முழு அளவில் மின்விநியோகம் தொடங்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE