சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள குப்பைகள், முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வெள்ளிக்கிழமை வழங்கினார். மேலும் மழை - வெள்ளத்தால் தண்ணீர் தேங்கிய பகுதிகளிலும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அனைத்து மண்டல அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் இந்தப் பகுதி பொறுப்பாளர்களான ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருடனும் நேற்று இரவு பேசினேன். அவர்கள் கேட்டுக்கொண்டபடி, இந்தப் பகுதிக்கு தேவையான 5 ஜேசிபி இயந்திரங்கள், 10 மோட்டார்கள் அனுப்பிவைக்கப்பட்டது. இதுபோல அதிகமான பாதிப்புக்குள்ளாகி தண்ணீர் தேங்கியுள்ள இடங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.

மற்ற இடங்களைப் பொறுத்தவரை, இன்று காலை எங்களைத் தொடர்பு கொண்டு பேசிய தமிழக முதல்வர், ஏற்கெனவே தண்ணீர் வடிந்த இடங்களில் எல்லாம் குப்பைகள் குவிந்துள்ளன. அந்தக் குப்பைகளை அகற்றுங்கள். முறிந்து விழுந்து கிடக்கும் மரங்களை எல்லாம் அப்புறப்படுத்தவும், சாலைகளில் குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி, வெள்ளம் வடிந்த இடங்களில் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது எந்தெந்த இடங்களில் தண்ணீர் இருக்கிறது என்றால், பள்ளிக்கரணை, முடிச்சூர், ஆர்.கே.நகர் மற்றும் கொளத்தூரில் இரண்டு பகுதிகள். அந்த இரண்டு இடங்களுக்கும் தண்ணீரை வெளியேற்ற 10 மோட்டார்கள் கேட்டனர். அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மணலி, கொளப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய இடங்களில் கொஞ்சம் தண்ணீர் உள்ளது. அந்த இடங்களுக்கு எல்லாம் மோட்டார் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குடிநீரைப் பொறுத்தவரை, நேற்று ஒருநாளில் மட்டும் 2500 நடைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு 81 நடைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், பொதுமக்கள் அரிசி கேட்டனர், உடனடியாக அரசியும் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிப்புக்குள்ளான இந்தப் பகுதி இன்று மாலை அல்லது நாளைக்குள் சரி செய்யப்பட்டு விடும். பெரும்பாக்கம் பகுதியில் 3 தெருக்களில் 5 அடி வரை தண்ணீர் தேங்கியிருக்கிறது. இப்போது அங்குதான் செல்கிறோம். அந்தப் பகுதியில் தண்ணீரை இறைத்தால், மீண்டும் அங்கு தண்ணீர் வந்துவிடுகிறது. திரும்பத் திரும்ப அங்கு தண்ணீர் வந்துவிடுகிறது, அதனை சரிசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE