தமிழகம்

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும்: சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஆந்திரா, கர்நாடகா போல் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். சட்டப்பேரவையை 90 நாட்கள் நடத்த வேண்டும், லோக் ஆயுக்தா மசோதா கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வைத்துள்ளது.

இது குறித்த சட்டப்பஞ்சாயத்து இயக்க அறிக்கை:

“ஆளும் அதிமுக அரசிற்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 8 அன்று துவங்க உள்ளது. புதிய ஆளுநராக பன்வரிலால் புரோஹித் பதவி ஏற்ற பிறகு கூடும் முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

51 வருடமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிட கட்சிகள், பாரம்பரியம் மிக்க தமிழக சட்டமன்ற செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல அதிக அளவில் முயற்சிகள் எடுக்கவில்லை.

காலத்திற்கேற்ப சட்டமன்ற நெறிமுறைகளை மேம்படுத்தினால் மட்டுமே, சட்டமன்றம் அதன் முக்கியத்துவத்தை தக்கவைத்து கொள்ள முடியும். இந்த ஆண்டில் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான மசோதாக்கள், சட்டமன்ற சீர்திருத்தங்கள், கடந்த கால தவறுகளை சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோடிட்டு காட்ட விரும்புகிறது.

பாராளுமன்றத்தில் உள்ளது போல் துறைவாரியாக நிலைகுழுக்களை அமைக்கவேண்டும்:

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பெரும்பான்மையான சட்டங்கள், அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய நிலைக்குழுக்கள் தீர்க்கமாக ஆராய்ந்த பிறகு தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது. அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கட்சிகள் வெளியில் எதிர்த்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து நிலைக்குழுவில் சட்டத்தை ஆராய்ந்து திருத்திய பிறகே, அந்த மசோதாக்களை பாராளுமன்றம் நிறைவேற்றுகிறது.

துறைவாரியாக நிலைக்குழுக்கள் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த நிலைக்குழுக்கள் தேர்ந்த ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது.

தமிழக சட்டமன்றம் 70 ஆண்டுகளாக இயங்கி வந்தாலும், இந்த உள்கட்டமைப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை. தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையான சட்டங்கள் எந்த விவாதமின்றி பெயரளவிற்கு மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. சட்டங்களை விவாதித்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்ட பிறகு மட்டுமே மசோதாக்கள் நிறைவேற்றவேண்டும்.

சட்டமன்றம் 90 நாட்கள் கூட வேண்டும்:

இந்திய அரசியலமைப்பு சாசனத்தை மறுசீராய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் நாராயணராவ் கமிட்டி (2000), மாநில சட்டமன்றங்கள் 90 நாட்கள் , ராஜ்ய சபை 100 நாட்கள் மற்றும் லோக்சபை 120 நாட்கள் இயங்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. ஆனால் தமிழக சட்டசபை சராசரியாக வருடத்திற்கு 35 நாட்கள் மட்டுமே இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் போராட்டமே இல்லாத நாட்கள் இல்லை என்று இருக்கும் நிலையில், சட்டமன்றம் பரிந்துரைக்கப்பட்ட நாட்களை விட அதிகமாக கூட வேண்டும்.

2015-ல் தமிழக சட்டசபை கூடிய நாட்கள் : 28

2016-ல் தமிழக சட்டசபை கூடிய நாட்கள் : 35

2017-ல் தமிழக சட்டசபை கூடிய நாட்கள் : 37

2004-ல் வெறும் 16 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்றம் கூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரியில் (2017) எடப்பாடி தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு அரசின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக இருந்த நிலையில், பட்ஜெட்டுக்கு பிறகு உடனடியாக நடக்க வேண்டிய மானிய கோரிக்கை 3 மாதம் கழித்து நடந்தது. அரசியல் காரணங்களுக்காக மானிய கோரிக்கையை தள்ளி வைப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

இந்திய பாராளுமன்றம் பொதுவாக காலை 11 முதல் மாலை 6 மணி வரை இயங்குகிறது.ஆனால் தமிழக சட்டமன்றம் காலை 10 முதல் 1 மணி வரையே இயங்குகிறது. நடக்கும் விவாதங்களிலும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், "தகுந்த நடவடிக்கைகள்/முடிவுகளை அரசு எடுக்கும்" என்று கூறிவிட்டு அமர்ந்து விடுகிறார்கள்.

அந்த முடிவுகளை எடுப்பதற்கும் தெரிவிப்பதற்கும் தான் சட்டமன்றம் உள்ளது என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். நீட், காவேரி, கதிராமங்கலம், முல்லைப்பெரியாறு போன்ற தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகளை எதிர்கட்சியுடன் விவாதித்து தீர்க்கமான முடிவுகளையும் கொள்கைகளையும் வெளிக்கொணர வேண்டும்.

தேவையின்றி 110 வது விதியை பயன்படுத்தக்கூடாது:

போர் காலங்களில் அல்லது இக்கட்டான சூழ்நிலையில் அல்லது விவாதம் செய்ய நேரம் இல்லாத நிலையில் மட்டுமே 110-வது விதியை பயன்படுத்த வேண்டும். மறைந்த முன்னாள் ஜெயலலிதா சட்டசபையில் பேசினாலே 110-வது விதியின் கீழ் பேசும் போக்கை கடைபிடித்தார். பல விமர்சனங்களுக்கு உள்ளான போதும், சபை மாண்பை குறைக்கும் வகையில் விதிகளுக்கு எதிராக செயல்பட்டார்.

அவ்வழியை எக்காரணத்திற்காகவும் தற்பொழுது உள்ள அதிமுக அரசு பின்பற்ற கூடாது. தவறான முன்னதாரணத்தை ஏற்படுத்தக்கூடிய வரலாற்று பிழையை அரசு செய்ய கூடாது.

சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுகோள்:

பாராளுமன்றத்தை போல் தமிழக சட்டசபை நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று சில காலங்களாகவே தொடர்ந்து கோரிக்கை வைத்தும், தமிழக அரசு செவிசாய்க்காமல் இருக்கிறது. 2012-ல் இது சம்பந்தமாக தொடரப்பட்ட பொது நல வழக்கில், ஜெயலலிதா தலைமையிலான அரசு,அரசின் நிதி பற்றாக்குறையால் நேரடி ஒளிபரப்புக்கு ஆகும் 60 கோடியை ஏற்க முடியாது என்று தெரிவித்தது.

ஆளும் அதிமுக அரசு தங்களுடைய ஒற்றுமையை நிரூபிக்கவும் அரசியல் காரணங்களுக்காகவும், எதற்கும் உபயோகம் இல்லாத எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை 200 கோடி ரூபாயில் நடத்தி வருகிறது. எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாளுக்காக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய அந்த பணத்தை ஒதுக்கி இருந்தால், தமிழகமே ஆளும் அரசை பாராட்டி இருக்கும்.

ஆனால் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தியதால், எம்ஜிஆர் நினைவு நாளில் ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளும் அதிமுக அரசு மண்ணை கவ்வியது. எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்த பொழுது, அவரது தொலைக்காட்சி கேப்டன் டிவி மூலமாக இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக இருப்பதாக கூறிய பின்னும் தமிழக அரசு அக்கோரிக்கையை பரிசீலிக்கவில்லை.

அரசின் ஆளுமையையும், அமைச்சர்களின் திறமைகளையும்,உறுப்பினர்களின் வாதத்திறனையும் குறைவாக இருப்பதினால் அரசு அஞ்சுகிறதா? அண்டை மாநிலமான ஆந்திராவில் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கர்நாடகாவில் தனியார் தொலைக்காட்சிகள் அனுமதிக்கப்படுகிறது. இன்னும் எளிமையாக இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் அல்லது தூர்தர்ஷன் பொதிகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.

ஜனநாயகத்தின் கோயிலாக செயல்படும் சட்டசபையிலே வெளிப்படைத்தன்மை இல்லை என்பது வருத்தற்குரிய செய்தி. இனிமேலும் அற்ப காரணங்களை காரணம் காட்டி காலம் தாழ்த்தாமல் ஜனநாயகத்தை வலிமைப்படுத்த உடனடியாக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். தமிழக சட்டமன்றத்தின் இணையத்தளமானது எந்த ஒரு தகவலையும் எளிதில் பெற முடியாத வண்ணம் மிகவும் மோசமாக உள்ளது. அதனையும் தமிழக அரசு கருத்தில் கொண்டு மேம்படுத்த வேண்டும்.

மது ஒழிப்பு, லோக் ஆயுக்தா, சேவை பெரும் உரிமை சட்டத்தை உடனடியாக நிறைவேற்றவேண்டும்:

படிப்படியாக மது விலக்கு கொண்டு வருவோம் என்று கூறிய அதிமுக அரசு, அரசியல் நெருக்கடி அல்லது தேர்தல் வரும் நேரங்களில் மட்டுமே மது விலக்கு பற்றி அறிவிப்பு வெளியிடுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில், வருடத்திற்கு 10% கடைகள் மூடப்படும் என்று அறிவித்து உள்ளார்கள். அது போல் எப்படி மது விலக்கை அமல்படுத்தப்போகிறோம் என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

லோக் ஆயுக்தா, சேவை பெறும் உரிமை சட்டம் போன்ற சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. செவிடன் காதில் சங்கு ஊதியது போல், ஆளும் அரசு 8 ஆண்டுகளாக இந்த சட்டங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நடைபெறும் தொடரிலாவது அரசு இச்சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இது போன்ற உன்னதமான சட்டங்களை நிறைவேற்றினால் ஆளும் அதிமுக அரசை வரலாறு நினைவுகூறும்.

சட்டமன்றத்தின் இணையத்தளம் மிக மோசமான நிலையில் உள்ளது. கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உறுப்பினர்களின் வருகை பதிவு, அணைத்து மசோதாக்கள் மற்றும் சட்டமன்றம் தொடர்பான தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய உடனடியாக ஆவண செய்ய வேண்டும்.

5.95 கோடி வாக்காளர்களின் பிரதிநிதியாக செயல்படும் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புணர்ச்சியை புரிந்து கொண்டு செயல்படவேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை 1, லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தும் தீர்மானத்தை அரை மணி நேரத்தில் கருத்தொற்றுமையுடன் நிறைவேற்ற முடிந்த அரசுக்கு, உன்னதமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அக்கறை இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இந்த போக்கை மாற்றிக்கொள்ளாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளை அரசு தொடர்ந்தால், ஆர்கே நகர் தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலிலும் தகுந்த பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT