மிக்ஜாம் புயல் பாதிப்பு | ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை:மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். "மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டிச.5-ம் தேதி அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், "மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வெளியேற்றம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், 2023 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் தமிழக அரசால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த கார் பந்தயத்துக்கு தடை விதிக்கக் கோரி, மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? பந்தயம் நடத்துவதால் அரசு ஈட்டும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா? ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE