சேலத்தில் நடைபெறவிருந்த திமுக இளைஞரணி மாநில மாநாடு டிச.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: "மிக்ஜாம்" புயலால் பெய்த பெருமழை வெள்ளம் காரணமாக சில மாவட்டங்களில் மழை, வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் வரும் டிச.17ம் தேதி சேலத்தில் நடைபெறவிருந்த இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிச.24ம் தேதிக்கு மாற்றப்படுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: "மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை, வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். இம்மழையால் மாநகரில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. இதில் வியாழக்கிழமை நிலவரப்படி 384 இடங்கள் மற்றும் 6 சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் வடியவில்லை. நீரை வெளியேற்ற 1,068 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதியில் 73 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் 12 ஆயிரத்து 355 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், வெள்ளம்பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கும்இதுவரை 33.64 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையை மீட்கும் பணியில் ஏற்கெனவே 23 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் 267 இடங்களில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். பொதுமக்களை மீட்கும் பணியில் 240 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் பால் பாக்கெட், 6 ஆயிரம் பால் பவுடர், 32 ஆயிரம் ரொட்டி பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE