நெல்லை மேயருக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர்கள் கடிதம்: நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி, திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்ட மனு மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில், 51 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். திமுக கவுன்சிலர்கள் அனைவருமே முன்னாள் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் மூலம் கவுன்சிலர் சீட் வாங்கியவர்கள். எனவே அவர்களில் பெரும்பாலானோர் தற்போது வரை அவருக்கு விசுவாசமாகவே இருந்து வருகின்றனர்.

மேயர் சரவணனும் அப்துல் வகாப் மூலமாகவே கவுன்சிலராகும் வாய்ப்பை பெற்றார். சரவணன் மேயரானதில் இருந்து அவருக்கும், அப்துல் வகாபுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இவர்களுடைய மோதல் போக்கால் திருநெல்வேலி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் முடங்கியிருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அப்துல்வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக மாநகராட்சி கூட்டங்களில் மேயரு க்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேயருக்கு எதிராக கோஷம்போடுவது, மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைப் பது, மன்ற அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவது என்றெல்லாம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதை பொருட்படுத்தாமல் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கானுடன் இணைந்து தனி வழியில் மேயர் பயணிக்க தொடங்கியிருக்கிறார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் நிலவும் பிரச்சினைக்கு முடிவு கட்ட, மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம்தென்னரசு இரு தரப்பினரி டமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினை தீரவில்லை. மேயர் விவகாரத்தால்தான் அப்துல் வகாபிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது . இதனால், அவர்தான் திமுக கவுன்சிலர்களை தூண்டிவிட்டு தொடர்ச்சியாக பிரச்சினை செய்வ தாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், தாங்கள் யார் பேச்சையும் கேட்டு நடக்கவில்லை என்றும், மேயர் அனைத்து வார்டு களையும் சமமாக கருதாமல் தனக்கு வேண்டப்பட்ட வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாகவும், மாநகராட்சி திட்டப் பணிகளில் முறைகேடு செய்வதாகவும் திமுக கவுன்சிலர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் கட்சி தலைமை குழப்பம் அடைந்திருந்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் பவுல்ராஜ், மன்சூர், ரவீந்தர், கவுன்சிலர் இந்திரா மணியின் கணவரும் திமுக பிரதிநிதியுமான மணி ஆகியோர், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டனர். இந்நிலையில் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்டு மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் தற்போது கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் திருநெல்வேலி மாநகராட்சி விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

மாநகராட்சியை கலைக்க வேண்டும்:

அதிமுக: அதிமுக மாவட்டச் செயலாளர் கணேசராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமாறு மனு அளித்துள்ளனர். மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில் 60 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 33 கவுன்சிலர்கள் மனு அளித்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். எனவே, மாநகராட்சி ஆணையர் அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து கவுன்சிலர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி, ஒரு மாதத்துக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும். சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளுக்காக கவுன்சிலர்கள் போராடவில்லை. ஒப்பந்தக்காரர்கள், தொழிலதிபர்களிடம் பெற்ற வசூல் பணத்தை பங்கு வைப்பதில்தான் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத கவுன்சிலர்கள் தற்போது இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? என்று தெரியவில்லை. பேட்டை பகுதியில் திறக்கப்பட்ட சரக்கு பெட்டக முனையம் பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ரூ. 2.85 கோடி மதிப்பில் திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் சீரமைக்கப்பட்டது என்று கூறினார்கள். ஆனால் வெறுமனே பெயிண்டிங் மட்டும் செய்து முடித்து விட்டனர். தற்போது அதில் தூண் பகுதி இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்து விட்டார். தற்போது திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவு அளிப்பார்கள். மாநகராட்சி ஆணையர் உடனடியாக இந்த மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியை முடக்கி வைத்து உடனடி தீர்வு காண வேண்டும். மாநகராட்சியின் நலனை கருத்தில் கொண்டு தற்போதுள்ள மாநகராட்சியை கலைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE