இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை - துரித நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: மழை விட்டும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. துரித நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை, மிக் ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை, மிதமான மழை, கன மழை, அதி கன மழை என, கொட்டித் தீர்த்தது. இந்த மழை காரணமாக, சென்னை குடிநீர் ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட நீர், ஆந்திர மாநிலம்- பிச்சாட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் வரும் மழைநீர் உள்ளிட்டவையால் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு மற்றும் கூவம் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் பூண்டிஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர், மீஞ்சூர் அருகே சீமாபுரம் பகுதியில் கரையை உடைத்து வெளியேறியதால், சுப்பாரெட்டிபாளையம், விச்சூர், வெள்ளிவாயல், நாப்பாளையம், இடையன்சாவடி, பெரிய முல்லைவாயல் உள்ளிட்ட கிராமங்கள் நீரில் மிதக்கின்றன. பொன்னேரி, மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீசியசூறைக்காற்றில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால், 200-க்கும் மேற்பட்டமின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் பொன்னேரி மூகாம்பிகை நகர், சின்னக்காவனம், பழவேற்காடு, வைரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன.

அதே போல், மழைநீர், கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரால், திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கேஉள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால், அப்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழை நின்று 3 நாட்களுக்கு மேலாகியும் திருவள்ளூர் அருகே காக்களூர்- ம.பொ.சி.நகர், வி.எம்.நகர், விவேகானந்தா நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் வடியவில்லை. இதனால், மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறி நேற்று முன்தினம் பொதுமக்கள், காக்களூர்- சென்னை - திருப்பதி தேசியநெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கு ஆய்வு செய்ய வந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி ஆகியோரிடம், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மழைநீர் வடியாததால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் தடை தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆகவே மழைநீர்வெளியேற துரித நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும்,மின் தடைக்கு முற்றுப்புள்ளிவைக்கக் கோரியும் செங்குன்றம், தாமரைப்பாக்கத்தை அடுத்த எடமேடு, தொழுவூர், பூந்தமல்லி, பொன்னேரியை அடுத்த சின்னகாவனம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி மழை விட்டாலும் இயல்பு வாழ்க்கையை தொடரமுடியாமல் திருவள்ளூர்மக்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE