அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு கோரிய திருமாவளவன் மனு தள்ளுபடி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் அரசு வழக்கறிஞர் பணியில் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் , மகளிருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் உட்பட 132 அரசு வழக்கறிஞர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், பட்டியலினத்தவர்களுக்கு 19 சதவீத இடஒதுக்கீடு அல்லது மொத்த பணியிடங்களில் 25 சதவீதம் என பிரநிதித்துவம் வழங்க வேண்டும். மேலும் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. அரசு வழக்கறிஞர்ளை தேர்வு செய்யும் குழு எப்படி அமைக்கப்படுகிறது என்று தெளிவாக கூறப்படவில்லை. எனவே, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்த இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE