“தமிழக நலனை தாரைவார்த்த திமுக அரசு” - அன்புமணி சாடல் @ புதிய மருத்துவக் கல்லூரி விவகாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: “இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் நாளுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியிருந்த காலக்கெடு நவம்பர் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது. 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், கிடைத்த அரிய வாய்ப்பை தமிழக அரசு தவற விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 2021 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தமிழக அரசு தொடங்கவில்லை. அதற்கான நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

மற்றொருபக்கம், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் நாள் தேசிய மருத்துவ ஆணையம் நடைமுறைப்படுத்தியது. அந்த விதிகளின்படி, தமிழக மக்கள் தொகைக்கு தேவையானதை விட கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால், தமிழ்நாட்டில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்படாது என்றும் மருத்துவ ஆணையம் ஆணையிட்டது. அதற்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து நான் தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் பிரதமருக்கு கடிதமும் எழுதினேன். அதன் பயனாக தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கான கட்டுப்பாடுகள் ஓராண்டுக்கு தளர்த்தப்பட்டன. அதன்படி 2024-25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளை திறக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது.

அதன்படி, 2024-25ஆம் ஆண்டில் புதிய கல்லூரிகளைத் தொடங்க நவம்பர் 16-ஆம் நாள் முதல் 26-ஆம் நாள் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் புதிய மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக 2025-26ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது தான் கடைசி வாய்ப்பு என்பதால் அதை தமிழக அரசு உறுதியாக பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை தாரை வார்த்து விட்டது. இது அரசின் பெரும் தோல்வி.

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியிருப்பதன் மூலம், தேசிய மருத்துவ ஆணையம் அதன் விதிகளை திருத்தாத வரை, தமிழ்நாட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவே முடியாது என்ற நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற கனவை நனவாக்கவே முடியாத பின்னடைவை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்காதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரபூர்வமாக விண்ணப்பிக்கவில்லை. ஆனால், மத்திய அரசு நிதியுதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முயற்சி செய்து வருவதால் தான் இப்போது புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று அரசு சார்பில் அதிகாரபூர்வமற்ற வகையில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கும் திட்டத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக மத்திய அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்தின்படி மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான செலவில் மத்திய அரசு 60 விழுக்காட்டையும், மாநில அரசு 40 விழுக்காட்டையும் பகிர்ந்து கொள்ளும். இத்திட்டத்தின்படி முதல் இரு கட்டங்களில் அனுமதிக்கப்பட்ட 82 மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. மூன்றாம் கட்டமாக 75 மருத்துவக்கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட போது, அவற்றில் 15 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று பாமக தான் முதன்முதலில் வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளால் தமிழகத்திற்கு மொத்தம் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன. அந்தத் திட்டம் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இனி மத்திய அரசு உதவியுடன் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வாய்ப்பில்லை.

இந்த உண்மையை மறைத்து விட்டு, மத்திய அரசு உதவியுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்போவதாக தமிழக அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். 3 ஆண்டுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐந்தாண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தொடங்காத அரசு என்ற அவப்பெயரை இன்றைய அரசு சுமக்க நேரிடும். எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அன்புமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்