புயல், வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களிலும் முழுவீச்சில் மீட்பு பணிகள் தீவிரம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் மீட்பு பணிகள்முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வடசென்னை பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதுதொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் வழக்கறிஞர் ஞானபானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.

அப்போது மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது முதல் போர்க்கால அடிப்படையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்தது. வெள்ள பாதிப்பு உள்ளபகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து தமிழகஅரசு அதிகாரிகளும், மாநகராட்சிஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தவிர வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், மேற்கு தாம்பரம், முடிச்சூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட வட சென்னைபகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் மீட்பு பணியில் 14 அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ முகாம்களும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ஆவின் பால்தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

அதையேற்ற நீதிபதிகள், மனுதாரர் குறை இருந்தால் அரசிடம்முறையிடலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

தலைமை நீதிபதி கருத்து

இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலாவுக்கு மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரும்பாலான வழக்கறிஞர்கள் சென்னையில் பெய்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.

மேலும் ஆஜரான ஒருசில வழக்கறிஞர்களும் தங்களால்கோப்புகளை படித்து விசாரணைக்கு தயாராக முடியவில்லை என்றும் எனவே, வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்என்றும் கோரினர்.

அப்போது தலைமை நீதிபதி, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கமான பருவமழை காலங்களிலும், வெள்ளம் போன்ற அசாதரண சூழல்களிலும் ஒரு நாள் கூட நீதிமன்ற பணிகளை தள்ளி வைத்தது கிடையாது. நீதிமன்ற ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்றாலும் கூட நீதிமன்ற பணிகள் அன்றாடம் போல் நடக்கும் என கருத்து தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE