தேனியில் பருப்பு மில் உரிமையாளர் வீடு உட்பட 8 இடங்களில் வருமான வரி சோதனை

By செய்திப்பிரிவு

தேனி: தேனியில் பருப்பு மில் உரிமையாளரின் வீடு, மில் உட்பட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பருப்புமில் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரகுமார். இந்த நிறுவனம் தென்னிந்திய அளவில் பருப்பு வகைகளை மொத்த விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனம் முறையாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 8 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

தேனி இடமால் தெருவில் உள்ள தலைமை அலுவலகம், பெரியகுளம் சாலையில் இயங்கும் அலுவலகம், நகராட்சி அலுவலகம் அருகே உள்ள உரிமையாளரின் வீடு, அன்னஞ்சி விலக்கில் உள்ள ஆலை, பழைய அரசு மருத்துவமனை அருகில் உள்ள மேலாளரின் 2 வீடுகள் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

வருமான வரித் துறை கூடுதல் இயக்குநர் மைக்கேல் ஜெரால்டு தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர்.

வருமான வரித் துறை சோதனை நேற்று இரவு வரைதொடர்ந்தது. இதில் வருமானவரித் துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE