மிக்ஜாம் | சென்னைக்குள் செல்ல முடியாமல் 60 ஆயிரம் லாரிகள் நிறுத்திவைப்பு: 1.5 லட்சம் பேர் வேலை இழப்பு

By செய்திப்பிரிவு

சேலம்: 'தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் லாரிகள் மிக்ஜாம் புயலால் சென்னைக்குள் செல்ல முடியாமல் மேடான பகுதிகளில் ஆங்காங்கே 60 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், 1.5 லட்சம் லாரி தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகியுள்ளனர்' என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு பால், ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், வெல்லம், மஞ்சள், காய்கறி உள்பட மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் 60 ஆயிரம் லாரிகள் மூலம் பல்வேறு சரக்குகள் அனுப்பி வைக்கப்படும்.

தற்போது, புயல் வெள்ளம் வடியாத நிலையில் சென்னையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சரக்குடன் சென்ற லாரிகள் சென்னையின் புற நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னைக்குள் லாரிகள் செல்ல முடியாத நிலையால், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

லாரி போக்குவரத்து முடங்கியுள்ளதால் லாரி உரிமையாளர்கள் வருவாய் இழப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல, லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள், சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலித் தொழிலாளர்கள், லாரி புக்கிங் ஏஜென்ட்டுகள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் லாரி தொழிலை நம்பியுள்ள 1.50 லட்சம் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக வருவாய் இன்றி பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக லாரிகள் சென்னைக்கு இயக்கப்படாத நிலையில், லாரிகளுடன் காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களையும், வெள்ளத்தில் சிக்கிய லாரிகள் பழுதான செலவையும் அரசு வழங்க வேண்டும். இதன்மூலம் தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE