பெரம்பலூர், திருச்சியிலிருந்து ரூ.1.35 கோடி மதிப்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் / திருச்சி: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக திருச்சி, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, பாட்டில் குடிநீர், மெழுகுவத்தி, போர்வைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாசிய பொருட்கள் 3 வாகனங்களில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்னை மாவட்டம் புழுதிவாக்கம் பகுதிக்கு நேற்று முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிவாரண பொருட்களை எம்எல்ஏ ம.பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு அனுப்பி வைத்தார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.ராஜேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா, ஆட்சியர் அலுவலக மேலாளர் சிவா, பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல, திருச்சி மாநகராட்சி சார்பில் முதல் கட்டமாக பொதுமக்கள், தனியார் நிறுவனங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள், பிஸ்கெட், ரொட்டி, குடிநீர் பாட்டில்கள், மருந்து பொருட்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 2 லாரிகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இப்பொருட்களை மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் ஆர்.வைத்தி நாதன், துணை மேயர் ஜி.திவ்யா, நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் வழியனுப்பி வைத்தனர்.

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான அரிசி, கோதுமை மாவு, மளிகை பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், போர்வைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 8 லாரிகளில் சென்னைக்கு முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை ஆட்சியர் மா.பிரதீப் குமார் தலைமையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு உள்ளிட்டோர் அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE