மிக்ஜாம் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் வியாழக்கிழமை சென்னை வருகை

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (டிச.7) சென்னை வருகிறார்.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (டிசம்பர் 7) சென்னை வருகிறார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் வருகிறார்.

சென்னை வரும் ராஜ்நாத் சிங் மழை வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்ட சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வுசெய்கிறார். இந்த ஆய்வின்போது தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருப்பார் என தெரிவிக்கப்பபட்டுள்ளது. பின்னர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், எல்.முருகனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ளச் சேதங்கள் பற்றி கேட்டறிய உள்ளனர்.

முன்னதாக, தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE