ஐடி அதிகாரிகள் மீது தாக்குதல்: கரூர் திமுகவினர் ஜாமீன் ரத்து வழக்கில் வீடியோ பதிவை ஆய்வு செய்ய உத்தரவு 

By கி.மகாராஜன் 


மதுரை: கரூரில் வருமான வரித் துறையினர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற திமுகவினர் உள்ளார்களா என்பதை வீடியோ பதிவை ஆய்வு செய்து போலீஸார் தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் வீடுகளில் மே 25-ல் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையிட வந்த வருமான வரி அதிகாரிகளை தாக்கி, அரசு முத்திரைகள், பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் உள்ள தகவல்களை அழித்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுகவினருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறையினர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை ஏற்று திமுகவினர் ஜாமீனை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமீன் பெற்ற திமுகவினர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இதே வழக்கில் ஜாமீன் பெற்ற திமுகவினர் ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, கரூர் சம்பவத்தின் வீடியோ ஆதாரத்தை வருமான வரித்துறையினர் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தரப்பில், கரூர் சம்பவத்தின் வீடியோ பதிவுகள் போலீஸாரிடம் தான் உள்ளது. போலீஸார் தான் ஜாமீன் பெற்ற 4 பேரும் வீடியோ பதிவில் உள்ளார்களா என்பதை கண்டுபிடித்து தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, கரூர் சம்பவத்தின் வீடியோவில் ஜாமீன் பெற்ற 4 பேரும் உள்ளார்களா? என்பதை போலீஸார் கண்டறிந்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை டிச.14-க்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE