7-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: ஜெ. நினைவிடத்தில் பழனிசாமி தலைமையில் அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் நேற்று மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டுடிச.5-ம் தேதி உயிரிழந்தார். அதிமுகசார்பில் ஒவ்வொரு ஆண்டு டிச.5-ம்தேதி ஜெயலலிதாவின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 7-ம் ஆண்டு நினைவு தினமான நேற்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சென்னை பசுமை வழிசாலையில் உள்ள தனது இல்லத்தில்அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து,மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், எஸ்.கோகுலஇந்திரா, ஆர்.பி.உதயகுமார் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, 'மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். பொய்யான வாக்குறுதி தந்து மக்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவுகட்டுவோம்' என்று கூறி ஜெயலலிதா நினைவு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணைப் பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், அமைப்பு செயலாளர் கரிகாலன் உள்ளிட்டோரும் அஞ்சலிசெலுத்தினர்.இதேபோன்று, சசிகலாவும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE